கோவை ஜிசிடி கல்லூரியில் இயந்திரவியல் துறை தலைவரின் காரை குடிநீரில் கழுவிய ஊழியர்கள்

*வீடியோ வைரல்

கோவை : கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரியின் இயந்திரவியல் துறை தலைவர் தனது சொந்த காரை கல்லூரியில் பணியாற்றும் ஊழியர்களை வைத்து குடிநீரை பயன்படுத்தி கழுவ வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. கோவை தடகாம் சாலையில் அரசினர் தொழில்நுட்ப கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் இயந்திரவியல் துறை தலைவராக ரமேஷ் இருந்து வருகிறார். இவர் தனது சொந்த காரை கல்லூரி வளாகத்தில் உள்ள சிறுவாணி குடிநீரை பயன்படுத்தி தொழில்நுட்ப பணியாளர்கள் மூலம் கழுவ செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. டெக்னிக்கல் அலுவலர்கள் முரளி, செந்தில்குமார், பயிற்றுனர் சண்முகம் ஆகியோர் கல்லூரியில் உள்ள குடிநீரை பயன்படுத்தி ரமேஷ் காரை சுத்தம் செய்துள்ளனர்.

சுத்தம் செய்ய மறுத்தால் பணியில் இருந்து நீக்கி விடுவேன் என மிரட்டுவதாகவும் புகார் எழுந்துள்ளது. குடிநீர் தட்டுப்பாடு நீடித்து வரும் நிலையில், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வரும் நிலையில், குடிநீரை கார் கழுவ பயன்படுத்திய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ரமேஷ் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது. இந்த சம்பவம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஜிசிடி கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.

The post கோவை ஜிசிடி கல்லூரியில் இயந்திரவியல் துறை தலைவரின் காரை குடிநீரில் கழுவிய ஊழியர்கள் appeared first on Dinakaran.

Related Stories: