மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளில் உள்ள மதுபானங்கள் 1 வாரத்தில் வேறு இடத்துக்கு மாற்றம்: மேலாண் இயக்குனர் அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று முதல் மூடப்படும் டாஸ்மாக் கடைகளில் உள்ள மதுபானம் மற்றும் பிற பொருட்களை ஒரு வாரத்தில் வேறு இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று ஊழியர்களுக்கு மேலாண் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து டாஸ்மாக் மேலாண் இயக்குனர் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட எஸ்பிக்கள், இணை ஆணையர்கள் மற்றும் துணை ஆணையர்கள், டாஸ்மாக் மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்களுக்கு நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழ்நாடு முழுவதும் இன்று (22ம் தேதி) முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, குறைந்த விற்பனை உள்ள கடைகள், அருகருகே உள்ள கடைகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பள்ளிகள் அருகே உள்ள கடைகள், பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்று கூறப்பட்டிருந்த கடைகள், நீதிமன்றம் மூட உத்தரவிட்டிருந்த கடைகள், தங்கள் கட்டிடத்தில் மதுபான கடைகள் நடத்தக்கூடாது என்று கூறும் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த கடைகள் என 500 கடைகள் கண்டறியப்பட்டு இன்று முதல் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாற்று பணி அல்லது வேறு கடைகளில் பணியாற்ற வழிவகை ஏற்படுத்தி தரப்படும். மூடப்பட்ட இந்த 500 கடைகளில் உள்ள மதுபானம் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தையும் அருகில் உள்ள குடோன்களில் ஒப்படைக்கப்படும். மூடப்பட உள்ள கடைகளில் இன்று முதல் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது. அதேநேரம் இந்த கடைகளில் உள்ள மதுபானங்கள், பணம், பொருட்கள் அனைத்தையும் அடுத்த 7 நாட்களுக்குள் மண்டல மற்றும் மாவட்ட மேலாளர்களிடம் ஒப்படைத்துவிட்டு, கடைகள் முழுவதுமாக அகற்ற வேண்டும்.

இந்த கடைகளுக்கு அட்வானஸ் தொகை வழங்கப்பட்டு இருந்தால், வாடகையை கழித்துவிட்டு மீதி பணத்தை மாவட்ட மேலாளர்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும். இந்த நடவடிக்கைகளை டாஸ்மாக் தணிக்கையாளர்கள் கண்காணித்து, அந்த தகவலை உரிய அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். தகவலை தெரிவிக்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். பணம் திருப்பி வழங்குவதில் முறைகேடோ அல்லது பணம் குறைந்தாலோ அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட கலெக்டர்களும் இதை கண்காணித்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளில் உள்ள மதுபானங்கள் 1 வாரத்தில் வேறு இடத்துக்கு மாற்றம்: மேலாண் இயக்குனர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: