ஒரு கட்டத்தில் அவர்களின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் கொரிய வீரர்கள் தடுமாறினர். அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட பாக். வீரர்கள் அடிக்கடி கொரிய கோல் பகுதியை முற்றுகையிட்ட வண்ணம் இருந்தனர். அதன் பலனாக ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் பாக். வீரர் ஷாகித் அப்துல் ராணா அபாரமாக ஃபீல்டு கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்று தந்தார். அதன் பிறகு இரு அணிகளும் மல்லுக்கட்டியும் யாராலும் கோலடிக்க முடியவில்லை. இடைவேளையின்போது 1-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் முன்னிலையில் இருந்தது. 3வது கால் மணி நேர ஆட்டத்திலும் கோல் விழவில்லை. கடைசி குவார்ட்டரில் கொரிய வீரர்கள் கூடுதல் வேகத்துடன் கோல் அடிக்க முனைப்பு காட்டினர். அனல் பறந்த ஆட்டத்தின் விளைவாக இரு தரப்பிலும் வீரர்கள் காயமடைந்து வெளியேற… அடுத்தடுத்து மாற்று ஆட்டக்காரர்கள் களம் இறக்கப்பட்டனர். கடைசி 15 நிமிடங்களில் மட்டும் கொரியாவுக்கு 6 பெனால்டி கார்னர்கள் கிடைத்தன. அதில் ஒன்று பாக். வீரர்கள் செய்த தவறால் பெனால்டி ஷூட் வாய்ப்பாக மாறியது. அதனை சரியாகப் பயன்படுத்திய பதிலி ஆட்டக்காரர் ஜிவூன் யாங் மின்னல் வேகத்தில் கோலாக மாற்றினார்.
ஆட்டத்தின் 53வது நிமிடத்தில் அடித்த அந்த கோல் மூலம் ஆட்டம் 1-1 என சம நிலைக்கு வந்தது. கடைசி நிமிடத்தில் பாகிஸ்தானுக்கும் ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. எனினும், அவர்களால் அதை கோலாக மாற்ற முடியவில்லை. இதனால், விறுவிறுப்பான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. முதல் ஆட்டத்தில் ஜப்பானை எளிதில் வீழ்த்திய நடப்பு சாம்பியன் கொரியா, 2வது ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் போராடி டிரா செய்துள்ளது. பரிசளிப்பு விழாவில் சிறந்த இளம் ஆட்டக்காருக்கான விருதை முகமது அப்துல்லா, ஆட்டத்தின் சிறந்த வீரருக்கான விருதை அப்துல் சாகித் பெற்றனர். இந்த விருதுகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு, முன்னாள் கூடைப்பந்து வீராங்கனை அனிதா பால்துரை ஆகியோர் வழங்கினர்.
The post ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: கொரியா – பாகிஸ்தான் டிரா appeared first on Dinakaran.
