டாடா ஸ்டீல் செஸ் வெஸ்லி ஸோ சாம்பியன்: நிஹல் ஸ்ரீனுக்கு 2ம் இடம்

கொல்கத்தா: டாடா ஸ்டீல் செஸ் இந்தியா பிளிட்ஸ் ஓபன் பிரிவு போட்டியில் அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் வெஸ்லி ஸோ, முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றார். கொல்கத்தாவில் டாடா ஸ்டீல் செஸ் இந்தியா பிளிட்ஸ் ஓபன் பிரிவு போட்டிகள் நடந்து வந்தன. இந்த போட்டியின் முடிவில் சிறப்பாக ஆடிய அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் வெஸ்லி ஸோ, 12 புள்ளிகள் பெற்று முதலிடமும், இந்திய கிராண்ட் மாஸ்டர் நிஹல் ஸரீன் 11 புள்ளிகளுடன் 2ம் இடமும் பிடித்தனர்.

மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி 11 புள்ளிகள் பெற்றபோதும், புக்ஹோல்ட்ஸ் அடிப்படையில் 3ம் இடம் பிடித்தார். வெஸ்லி ஸோ கடைசியாக ஆடிய சுற்றில் இந்திய வீரர் விதித் குஜராத்தியுடன் மோதினார். டபுள்ரூக் எண்ட்கேம் முறையில் நடந்த அப்போட்டியில் விதித் தவறாக காய் நகர்த்தியபோது அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட வெஸ்லி அபார வெற்றி பெற்றார்.

மற்றொரு போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்தை சீன கிராண்ட் மாஸ்டர் வெ யி வீழ்த்தினார். அதனால், ஆனந்த் 8 புள்ளிகளுடன் 8ம் இடம் பிடித்தார். மகளிர் பிரிவில் நடந்த பிளிட்ஸ் போட்டியில் அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் காரிஸா யிப் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த போட்டியில் இந்திய வீராங்கனை வந்திகா அகர்வால் 2ம் இடம் பிடித்தார்.

Related Stories: