டெல்லியில் ஆடமுடியாது… விலகினார் ஆண்டர்ஸ்
புதுடெல்லி: இந்தியா ஓபன் பேட்மின்டன் போட்டியில் டென்மார்க்கை சேர்ந்த உலகின் 3ம் நிலை வீரரான ஆண்டர்ஸ் ஆன்டன்சென் பங்கேற்பதாக கூறப்பட்டது. ஆனால், அப்போட்டியில் பங்கேற்காமல் ஆண்டர்ஸ் திடீரென விலகியது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ‘இந்திய தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகமாக உள்ளது. அதனால்தான், இந்தியா ஓபன் பேட்மின்டன் போட்டியில் இருந்து விலகினேன். பேட்மின்டன் போட்டிகளை நடத்துவதற்கு உகந்த இடமாக டெல்லி இல்லை என்பதே என் கருத்து’ என ஆண்டர்ஸ் கூறியுள்ளார். ஆண்டர்ஸ், 4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிஸ்வான் வெளியேற்றம் பாக். ரசிகர்கள் குமுறல்
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பிக்பாஷ் லீக் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் முகம்மது ரிஸ்வான், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். சமீப காலமாக பேட்டிங்கில் சொதப்பி வரும் அவர் கடும் விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறார். இந்நிலையில் சிட்னி தண்டர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ரிஸ்வான் 23 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். அவரது ஸ்டிரைக் ரேட் கண்டு எரிச்சல் அடைந்த ரெனிகேட்ஸ் அணி கேப்டன் வில் சதர்லேண்ட், ‘ரிடையர்ட் ஹர்ட்’ ஆக வெளியேறும்படி கேட்டுக் கொண்டார். அதனால், வேறு வழியின்றி ரிஸ்வான் களத்தில் இருந்து வெளியேறினார். இந்த சம்பவம் அவமானத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என, பாக். கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்து வருகின்றனர்.
