இந்தியாவுடன் 2வது ஓடிஐ வெற்றியின் விளிம்பில் நியூசி: ராகுல், மிட்செல் அபார சதம்

 

ராஜ்கோட்: இந்தியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் 285 ரன் இலக்குடன் ஆடிய நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 42 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 235 ரன் எடுத்து வெற்றி பெறும் நிலையில் இருந்தது. இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில், 2வது ஒரு நாள் போட்டி, ராஜ்கோட்டில் நேற்று நடந்தது.

முதலில் ஆடிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் ரோகித் சர்மா (24 ரன்), கேப்டன் சுப்மன் கில் (56 ரன்), முதல் விக்கெட்டுக்கு 70 ரன் சேர்த்தனர். பின் வந்த விராட் கோஹ்லி 23 ரன்னிலும், ஷ்ரேயாஸ் ஐயர் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கே.எல்.ராகுல் சிறப்பாக ஆடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 92 பந்துகளில் ஒரு சிக்சர், 11 பவுண்டரிகளுடன் 112 ரன் குவித்தார். அவருடன் இணை சேர்ந்து ஆடிய ரவீந்திர ஜடேஜா 27, நிதிஷ் குமார் ரெட்டி 20, ஹர்சித் ராணா 2 ரன் எடுத்தனர்.

50 ஓவர் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 284 ரன் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் கிறிஸ்டியன் கிளார்க் 3, கைல் ஜேமிசன், ஜாக் ஃபோல்க்ஸ், ஜெய்டன் லெனாக்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். பின் 285 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. துவக்க வீரர்கள் டெவான் கான்வே 16, ஹென்றி நிகோல்ஸ் 10 ரன்னில் விக்கெட்டுகளை இழந்தனர்.

இருப்பினும் பின் வந்த வில் யங், டேரில் மிட்செல் இணை அட்டகாசமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இவர்களை பிரிக்க முடியாமல் இந்திய அணி பந்து வீச்சாளர்கள் திணறினர். இந்த இணை, 3வது விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்திருந்தபோது, வில் யங் 87 ரன்னில் ஆட்டமிழந்தார். 42 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 235 ரன் எடுத்து வெற்றியின் விளிம்பில் இருந்தது. மிட்செல் ஆட்டமிழக்காமல் 102, கிளென் பிலிப்ஸ் ஆட்டமிழக்காமல் 11 ரன்னுடன் ஆடிக் கொண்டிருந்தனர்.

Related Stories: