புதுடெல்லி: இந்தியா ஓபன் பேட்மின்டன் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்று இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த் கிடாம்பி, எச்.எஸ்.பிரனாய் அபார வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினர். தலைநகர் டெல்லியில் இந்தியா ஓபன் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி, சக இந்திய வீரர் தருண் மன்னெப்பள்ளியுடன் மோதினார். முதல் செட்டில் சிறப்பாக ஆடிய தருண் 21-15 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார். 2வது செட்டில் சுதாரித்து ஆடிய ஸ்ரீகாந்த், 21-6 என்ற புள்ளிக்கணக்கில் அந்த செட்டை வசப்படுத்தினார்.
தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி ஆடிய அவர் 3வது செட்டை 21-19 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். அதனால், 2-1 என்ற செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய அவர் அடுத்த செட்டுக்கு முன்னறேினார். மற்றொரு போட்டியில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய், ஹாங்காங் வீரர் லீ சீயுக் யியு மோதினர். முதல் செட்டில் இருவரும் ஆக்ரோஷமாக மோதி புள்ளிகளை எடுத்தனர். யார் வெற்றி பெறுவார் எனத் தெரியாத வகையில் விறுவிறுப்பாக நடந்த அந்த செட்டை 22-20 என்ற புள்ளிக் கணக்கில் பிரனாய் வசப்படுத்தினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டை, 21-18 என்ற புள்ளிக் கணக்கில் அவர் வென்றார். இதன் மூலம் 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய அவர் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.
* சிந்து சொதப்பல்
இந்தியா ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டி ஒன்றில் இந்திய வீராங்கனை மாளவிகா பன்சோட் – தைவான் வீராங்கனை பய் யு போ மோதினர். துவக்கம் முதல் விறுவிறுப்பாக நடந்த அந்த போட்டியின் முதல் செட்டை 21-18 என்ற புள்ளிக் கணக்கில் மாளவிகா கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் இருவரும் விட்டுக் கொடுக்காமல் ஆடினர். கடைசியில் அந்த செட்டை 21-19 என்ற புள்ளிக் கணக்கில் மாளவிகா வசப்படுத்தினார். அதனால் 2-0 என்ற நேர் செட் கணக்கில் வென்ற அவர் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, வியட்நாம் வீராங்கனை நுகுயென் துய் லின்னிடம், 22-20, 12-21, 15-21 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவி வெளியேறினார்.
