சிங்கஹள்ளி: விஜய் ஹசாரே கோப்பை ஒரு நாள் போட்டித் தொடரின் காலிறுதிப் போட்டிகள் கர்நாடகாவில் உள்ள சிங்கஹள்ளியில் நேற்று நடந்தன. மும்பை – கர்நாடகா அணிகள் இடையே நடந்த போட்டியில் மும்பை அணி முதலில் களமிறங்கியது. துவக்க வீரர்கள் அங்கிரீஷ் ரகுவன்ஷி 27, இஷான் முல்சந்தானி 20 ரன் எடுத்து அவுட்டாகினர். பின் வந்தோரில் ஷாம்ஸ் முலானி 86, சாய்ராஜ் பாட்டீல் ஆட்டமிழக்காமல் 33 ரன் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொதப்பியதால், 50 ஒவரில் மும்பை 254 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.
பின்னர், 255 ரன் இலக்குடன் கர்நாடகா அணி களமிளங்கியது. அதன் துவக்க வீரர் கேப்டன் மயங்க் அகர்வால் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் தேவ்தத் படிக்கல் 81 ரன், கருண் நாயர் 74 ரன் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். அப்போது மழை குறுக்கிட்டதால் போட்டி தடைபட்டது. கடைசியில், விஜேடி முறைப்படி கர்நாடகா, 55 ரன் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.
மற்றொரு போட்டியில் சவுராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் அணிகள் மோதின. முதலில் ஆடிய உபி அணியின் துவக்க வீரர்களில் ஒருவரான அபிஷேக் கோஸ்வாமி 88 ரன் குவித்து ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் ஆர்யன் ஜுயல் ரன் எடுக்காமல் வீழ்ந்தார். பின் வந்த வீரர்களில் சமீர் ரிஸ்வி ஆட்டமிழக்காமல் 88, பிரியம் கார்க் 35 ரன் எடுத்தனர். 50 ஓவரில் அந்த அணி 310 ரன் குவித்தது.
பின்னர், 311 ரன் இலக்குடன் சவுராஷ்டிரா களமிறங்கியது. அந்த அணியின் கேப்டன் ஹர்விக் தேசாய் 100 ரன் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். பிரெராக் மன்கட் 67, சிராக் ஜானி ஆட்டமிழக்காமல் 40 ரன் எடுத்தனர். சவுராஷ்டிரா 40.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 238 ரன் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. கடைசியில் விஜேடி முறைப்படி, 17 ரன் வித்தியாசத்தில் சவுராஷ்டிரா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றிகளை அடுத்து, கர்நாடகா, சவுராஷ்டிரா அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின.
