சென்னை அரும்பாக்கத்தில் சிறுமியை மாடு முட்டிய விவகாரம்: உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் சிறுமியை மாடு முட்டிய விவகாரத்தில் மாட்டின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை அரும்பாக்கத்தில் தாயுடன் நடந்து சென்ற சிறுமியை மாடு ஒன்று முட்டி தாக்கிய காட்சி பார்ப்போரை கதறவைத்துள்ளது. ஆலைமேட்டை சேர்ந்த ஹர்ஷன் பானு என்பவர் தனது இரண்டு மகள்களையும் பள்ளி முடித்து வழக்கம் போல வீட்டிற்கு அழைத்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த 7 மாடுகள் கூட்டமாக சென்ற போதும் அதில் ஒரு மாடு திடீரென 9 வயது சிறுமி ஆயிஷாவை கொம்பால் குத்தி தூக்கி வீசியது. பின்னர் கீழே விழுந்த சிறுமியை மாடு விடாமல் குத்திய நிலையில் அருகில் இருந்தோர் கூச்சலிட்டு மாடு மீது கற்களை வீசி காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் அதை பொருட்படுத்தாத மாடு சிறுமியை குத்தி தூக்கிய நிலையில் இருந்த போது பிரம்பால் மாட்டை அடித்து துரத்தினர்.

மாடு முட்டி காயமடைந்த சிறுமி ஆயிஷாவை அவரது தாய் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். இது குறித்து விசாரணை நடத்திய அரும்பாக்கம் போலீசார் சாலையில் அஜாக்கிரதையாக மாடுகளை அழைத்து சென்ற உரிமையாளரான அரும்பாக்கத்தை சேர்ந்த விவேக் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் சென்னையில் பொதுவெளியில் திரியும் மாடுகளை பிடித்து அடைத்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. பொது இடங்களில் மாடுகளை திரிய விடும் உரிமையாளர்களுக்கு ரூ.2000 வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் மாடுகள் சுற்றித்திரிவதை கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்தது.

The post சென்னை அரும்பாக்கத்தில் சிறுமியை மாடு முட்டிய விவகாரம்: உரிமையாளர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: