ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் தேடப்படும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆதரவாளர்கள் வீடுகளில் ரெய்டு: கரூரில் சிபிசிஐடி அதிரடி

கரூர்: ரூ.100 கோடி நில அபரிப்பு வழக்கில் தேடப்படும் அதிமுக முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர்களான 3 பேரின் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் நேற்று நடத்திய அதிரடி சோதனையால் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர், தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி, மகளை மிரட்டி, மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளனர் என கரூர் டவுன் காவல் நிலையத்தில் கடந்த ஜூன் 14ம் தேதி புகார் அளித்திருந்தார்.

இதுதொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது தம்பி சேகர், பிரவீன் உட்பட 6 பேர் மீது கொலை மிரட்டல், மோசடி செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் விஜயபாஸ்கர் திடீர் தலைமறைவானார். அவரை 5 தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்களிலிருந்து நேற்று காலை கரூர் வந்த சிபிசிஐடி போலீசார் 30 பேர், தலா 3 குழுவாக பிரிந்து 3 இடங்களில் 8 மணி முதல் சோதனை நடத்தினர்.

இதில் சார்பதிவாளர் அளித்த புகாரில் இடம் பெற்றுள்ள விஜயபாஸ்கரின் பெட்ரோல் பங்க்கில் பணியாற்றிய மணல்மேடு அடுத்துள்ள தாளப்பட்டியில் உள்ள யுவராஜ் வீட்டில், சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையில் 4 போலீசார் போலீசார் காலை 8 மணி முதல் 11 மணி வரை சோதனை நடத்தினர். இதே போல், கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சியில் உள்ள செல்வராஜ், வேலாயுதம்பாளையம் அடுத்துள்ள கவுண்டம்பாளையத்தில் உள்ள ரகு மற்றும் பத்திர பதிவின் போது சாட்சி கையெழுத்திட்ட முனியநாதனூரை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் வீடுகளிலும் 10க்கும் மேற்பட்ட சிபிசிஐடி போலீசார் காலை 8 மணி முதல் 11 மணி வரை சோதனை மேற்கொண்டனர். நில அபகரிப்பு வழக்கில் முக்கிய ஆவணங்கள் எதுவும் கிடைக்கிறதா என ஆய்வு செய்யப்பட்டது. சோதனை நடந்த 3 இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

* விஜயபாஸ்கர் ஆதரவாளர் கைது
கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேற்று மாலை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணை நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது, விஜயபாஸ்கர் ஆதரவாளரான கரூரை சேர்ந்த தமிழனியன் (29) என்பவர், வாதங்களையும் தனது செல்போன் மூலம் வாட்ஸ்அப் காலில் வைவ் செய்து, விஜயபாஸ்கரின் உறவினர்களுக்கு காட்டி கொண்டிருந்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து நீதிமன்ற எழுத்தர் கொடுத்த புகாரின் பேரில், தாந்தோணிமலை போலீசார் தமிழனியனை கைது செய்து, அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

The post ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் தேடப்படும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆதரவாளர்கள் வீடுகளில் ரெய்டு: கரூரில் சிபிசிஐடி அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: