ஈரோடு கலெக்டர் ஆபீசில் லஞ்ச ஒழிப்பு சோதனை: ரூ.10.40 லட்சம் ரொக்கம் பறிமுதல்; உதவி செயற்பொறியாளர் மீது வழக்கு

ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 5வது மாடியில் ஊரக உள்ளாட்சி துறை செயல்பட்டு வருகின்றது. இந்த அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக மோகன்பாபு (45) என்பவர் பணியாற்றி வருகின்றார். இவர், டெண்டர்கள் விடப்பட்டு முடிக்கப்பட்ட பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களிடமிருந்து கமிஷன் தொகை வசூலிப்பதாக ஈரோடு ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு நேற்று முன்தினம் மாலை தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராஜேஸ் தலைமையில், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் உள்ளிட்ட போலீசார் அதிரடியாக அலுவலகத்தில் புகுந்து சோதனை நடத்தினர். விடிய, விடிய நடந்த இந்த சோதனையின் போது உதவி பொறியாளர் மோகன்பாபுவிடமிருந்து ரூ.58 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், லஞ்சம் கொடுப்பதற்காக ஒப்பந்ததாரர்கள் கொண்டு வந்திருந்த ரூ.10 லட்சத்து 40 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து உதவி செயற்பொறியாளர் மோகன் பாபு மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

எல்லையில் ரெய்டு: தமிழக எல்லைப்பகுதியான ஜூஜூவாடியில் வட்டார போக்குவரத்து சோதனை சாவடி உள்ளது. இங்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று காலையில் திடீரென அதிரடி சோதனை நடத்தினர். சுமார் 3 மணி நேரம் நடந்த இச்சோதனையில், அங்கிருந்த கணக்கில் வராத ரூ.2,25,950 லட்சம் சிக்கியது. இந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் நிர்மல்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஈரோடு கலெக்டர் ஆபீசில் லஞ்ச ஒழிப்பு சோதனை: ரூ.10.40 லட்சம் ரொக்கம் பறிமுதல்; உதவி செயற்பொறியாளர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: