நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதற்கு தொடர்ந்து திமுக முயற்சி எடுக்கும்: திமுக எம்பி கனிமொழி பேட்டி

சென்னை: நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதற்கு தொடர்ந்து திமுக முயற்சி மேற்கொள்ளும். நீட் தொடர்பான நடிகர் விஜய்யின் கருத்தை வரவேற்கிறேன் என்று கனிமொழி எம்பி கூறினார். சென்னை செம்மொழிப் பூங்காவில் ‘ஊரும் உணவும்’ என்ற பெயரில் புலம் பெயர்ந்தவர்களின் உணவுத் திருவிழா நடக்கிறது. இதில், சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கலந்துகொண்டு உணவு திருவிழாவை தொடங்கி வைத்தார். ‘ஊரும் உணவும், உணவுத் திருவிழா வரும் 7ம் தேதி வரை நடைபெறும். இதில் பொதுமக்களுக்கு அனுமதி இலவசம். திருவிழாவில் தற்போது தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை மற்றும் மியான்மர் புலம்பெயர்ந்தவர்கள் 100க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன.

பிறகு கனிமொழி எம்பி அளித்த பேட்டி: சென்ற ஆண்டு தொடங்கப்பட்ட உணவுத் திருவிழா புலம்பெயர்ந்த மக்கள் அவர்களுடைய உணவுகளை நம்முடன் பகிர்ந்துகொள்ள இந்த ஆண்டும் நடக்கிறது. இந்த ஆண்டு அதிகமான கடைகள் திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நீட் வேண்டாம் என்று கருத்துச் சொல்லிக்கொண்டு இருக்கிறோம். இப்போதுதான் மற்ற மாநிலங்களில் உள்ள முதல்வர், மக்கள் ஆகியோர் இதற்கு பின்னால் இருக்கக்கூடிய பிரச்னைகளை உணர்ந்துள்ளார். பாராளுமன்றத்தில் விவாதிக்க ஒரு நாள் ஒதுக்கி இருக்கலாம். ஆளுங்கட்சியினர் நீட் பற்றி விவாதிக்க முன் வரவில்லை. நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதற்கு தொடர்ந்து திமுக முயற்சி மேற்கொள்ளும். நீட் தொடர்பான நடிகர் விஜய்யின் கருத்தை நானும் வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். உணவு திருவிழாவில், திமுக அயலக அணி தலைவர் கலாநிதி வீராசாமி எம்பி உள்பட பலர் பங்கேற்றனர்.

The post நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதற்கு தொடர்ந்து திமுக முயற்சி எடுக்கும்: திமுக எம்பி கனிமொழி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: