தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

சென்னை: தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் வருகிற 15ம் தேதி தொடங்கி வைக்கிறார். அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை குழந்தைகளில் பலர் காலை உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வருவதால், அவர்கள் சோர்வாக காணப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர், காலை உணவுத் திட்டத்தை கொண்டுவருவதாக அறிவித்தார். ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ என்ற பெயரிலான இந்த திட்டத்தை கடந்த 2022ம் ஆண்டு அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். முதல்கட்டமாக, 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.33 கோடியே 56 லட்சம் செலவில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. காலை உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் வருகை அதிகரித்ததுடன் அவர்களின் ஊட்டச்சத்தும், கற்றல் திறனும் மேம்பட்டதாக ஆய்வுகள் தெரிவித்தன. மேலும், அண்டை மாநிலமான தெலங்கானாவிலும், கனடா, இலங்கை ஆகிய நாடுகளிலும் அரசு பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் கடல் தாண்டியும் பிரபலம் அடைந்த நிலையில், 2023ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள 30 ஆயிரத்து 992 அரசு பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையில் படிக்கும் 15 லட்சம் மாணவ-மாணவிகள் பயனடையும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து, இந்த திட்டத்தை தமிழக ஊரக பகுதிகளில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. தமிழக சட்டப்பேரவையிலும் எம்எல்ஏக்கள் பலர் இந்த கோரிக்கையை முன்வைத்தனர். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட 2024-2025ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் 2 லட்சத்து 20 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் ரூ.600 கோடியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, காலை உணவு திட்ட விரிவாக்கத்தை, மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்திய காமராஜர் பிறந்த நாளான வரும் 15ம் தேதி (திங்கள்) திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கீழச்சேரியில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் காலை 8.30 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டி.பிரபு சங்கர் மற்றும் அரசு அதிகாரிகள் செய்து வருகிறார்கள். திருவள்ளூர் மாவட்டம் வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்க திமுகவினரும் பிரமாண்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். வருகிற 15ம் தேதி முதல்வரின் காலை உணவு திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனைத்து எம்பி,எம்எல்ஏக்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதி உள்ளார். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலினால் தமிழகத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள முதல்வரின் காலை உணவு திட்டம் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

The post தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு appeared first on Dinakaran.

Related Stories: