சீர்காழி: மயிலாடுதுறை அருகே சமையல் மாஸ்டரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 துப்பாக்கி, 19 தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் மேற்கு தெருவில் வசிப்பவர் கல்யாணசுந்தரம். இவரது மகன் கனிவண்ணன் (30). ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்த இவர், கடந்த 2ம்தேதி இரவு சட்டநாதபுரம் உப்பனாற்றின் கரையில் முகத்தில் பலத்த காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். விசாரணையில் சீர்காழி ஆர்விஎஸ் நகரை சேர்ந்த தேவேந்திரன் (53) என்பவர் கனிவண்ணனை சுட்டுக்கொன்றது தெரிந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
இதுகுறித்து போலீசில் தேவேந்திரன் அளித்த வாக்குமூலம்: விசாகப்பட்டினத்தில் மத்திய துணை ராணுவ படையில் பணிபுரிந்து வருகிறேன். சமையல் மாஸ்டரான கனிவண்ணனுடன் தனக்கு நட்பு இருந்து வந்ததால் நானும் அவரும் சேர்ந்து மது அருந்துவோம். கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்ததால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சம்பவம் நடந்த அன்று கனிவண்ணனை சட்டநாதபுரம் உப்பனாற்று கரைக்கு வரவழைத்து மதுஅருந்தினோம். அப்போது தேவேந்திரன் எனது குடும்பத்தினரை தவறாக பேசினார்.
இதனால் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கியால் கனிவண்ணனை சுட்டு கொன்றதாக தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து போலீசார், சீர்காழி ஆர்விஎஸ் நகரில் தேவேந்திரன் தங்கி இருந்த வீட்டில் ஒரு துப்பாக்கியும், தேவேந்திரனின் சொந்த ஊரான சீர்காழி அருகே சேத்தூர் வீட்டில் ஒரு துப்பாக்கி, 19 தோட்டாக்கள், ஒரு நாட்டுத்துப்பாக்கி மற்றும் சிகரெட் பற்ற வைக்கும் துப்பாக்கி வடிவிலான லைட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் தேவேந்திரனை நேற்று கைது செய்தனர்.
The post சமையல் மாஸ்டர் சுட்டுக்கொலை ராணுவ வீரர் கைது: 3 துப்பாக்கி, 19 தோட்டாக்கள் பறிமுதல் appeared first on Dinakaran.