ஒரே மாதத்தில் 2வது சம்பவம்: பீகாரில் மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்து விபத்து

கிஷன்கஞ்ச் : பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் கட்டப்பட்டு வந்த பாலம் நேற்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தில் காஹாரியா அகுவாணி சுல்தானாகஞ்ச் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் கங்கை ஆற்றின் குறுக்கே ரூ.1700 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் கடந்த 4ம் தேதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒரு காவலாளி உயிரிழந்தார். இந்நிலையில் நேற்று மீண்டும் ஒரு பாலம் இடிந்து விழுந்தது. தலைநகர் பட்னாவில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிஷன்கஞ்ச் உள்ளது.

இந்த பகுதியை கதிஹார் பகுதியுடன் இணைக்கும் வகையில் மெச்சி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டு வந்தது. நேற்று கட்டுமான பணியின்போது ஒரு தூண் இடிந்து விழுந்து விபத்து நேரிட்டது. ஒரேமாதத்தில் கட்டுமான பணியின் போதே 2 பாலங்கள் சரிந்து விழுந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி துணை முதல்வர் தேஜஸ்வி கூறுகையில்‘இந்த பாலப்பணிகளை மேற்கொள்வது தேசிய நெடுஞ்சாலை ஆணையம். எனவே அதிகாரிகள் மீது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

The post ஒரே மாதத்தில் 2வது சம்பவம்: பீகாரில் மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்து விபத்து appeared first on Dinakaran.

Related Stories: