அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

544. ஸுஷேணாய நமஹ: (Sushenaaya Namaha)

(திருநாமங்கள் 544 முதல் 568 வரை 25 திருநாமங்கள், வைகுண்டநாதனுடைய திருமேனி அழகின் வர்ணனை)

திருவரங்கத்தில் அரையர் சேவை என்பது பிரசித்தமாக, இன்றளவும் நடைபெற்று வருகிறது. மார்கழி மாதத்தில் நடக்கும் அத்யயன உற்சவத்தின் ஒரு பகுதியாக அரையர் சுவாமிகள் என்று அழைக்கப்படும் மகான்கள், ஆழ்வார் பாசுரங்களை இசைத்து, அபிநயம் பிடித்துக் காட்டுவார்கள். அதை அரையர் சேவை என்று அழைப்பார்கள். ராமாநுஜர் காலத்தில் இப்படி ஒரு முறை அரையர் சேவை நடைபெற்று வந்த சமயம். அப்போது அரையர் சுவாமி நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருந்து ஒரு பாசுரத்தை எடுத்து அபிநயம் பிடித்துக் காட்டினார்.

அன்னைஎன் செய்யில்என்? ஊர்என் சொல்லில்என்? தோழிமீர்!
என்னைஇனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண்துவராபதி
மன்னன் மணிவண்ணன் வாசுதேவன் வலையுளே.

– என்பது நம்மாழ்வாரின் பாசுரம்.

நம்மாழ்வார், பராங்குச நாயகி என்னும் பெண் பாவத்தில் இப்பாசுரத்தைப் பாடியுள்ளார். கண்ணன் மீதான காதலாலே பிச்சேறிய நிலையை அடைந்த பராங்குச நாயகி, கண்ணனைக் குறித்து மடல் எடுப்பது என்ற முடிவுக்கு வருகிறாள். மடல் எடுத்தல் என்பது என்னவென்றால், தலைவனைப் பிரிந்த தலைவி, தலைவன் தன்னைத் தேடி வந்து தன்னை மணக்க வேண்டும் என்பதற்காக, தலைவனின் படத்தைக் கையில் வைத்துக் கொண்டு, பனை மட்டையால் செய்யப்பட்ட குதிரையில் அமர்ந்த படி, ஊரெங்கும் சென்று ஊராரிடம் தலைவனிடம் தன்னைச் சேர்த்து வைக்குமாறு வேண்டுவாள். இதற்கு மடல் எடுத்தல் அல்லது மடல் ஊர்தல் என்று பெயர்.

தன் காதலனான கண்ணன் வராமையால், பராங்குச நாயகி இப்போது அவ்வாறு மடல் எடுக்கும் முடிவுக்கு வருகிறாள். அப்போது அவளது தோழி பராங்குச நாயகியைத் தடுத்தாள். கடலன்ன காமத்தர் ஆகிலும் மாதர் மடல் ஊரார் மற்றையர் மேல் என்ற பழமொழியை நினைவு கூர்ந்த தோழி, சமஸ்கிருத இலக்கியங்களில் பெண்கள் மடல் ஊரும் வழக்கம் உண்டு. ஆனால், தமிழ்ப் பெண்கள் மடல் ஊர்ந்ததாகத் தமிழ் இலக்கியங்களில் வழக்கமில்லை. எனவே இந்த முடிவை மாற்றிக் கொள் என்றுஅறிவுரை சொன்னாள் தோழி.

மேலும், உன் தாயும் மற்ற உறவினர்களும் நம் வீட்டுப் பெண் இப்படி வரம்பு கடந்து போய் மடல் ஊர்கிறாளே என்று வருந்த மாட்டார்களா, அவர்களுக்காகவாவது உன் முடிவைக் கை விடு என்றாள் தோழி.அதற்குப் பராங்குச நாயகி பதில் அளிக்கிறாள் – தாய் என்ன செய்தாலும், ஊர் என்ன சொன்னாலும், அதைப் பற்றி எல்லாம் எனக்குக் கவலை இல்லை. தோழிகளே நீங்களும் என்மீது இனி பற்று வைக்காதீர்கள். வண்துவராபதி எனப்படும் மன்னார்குடியில் எழுந்தருளியிருக்கும் ராஜகோபாலன் எனக்கு வலைவீசினான். அந்த வாசுதேவனின் வலையில் நான் சிக்குண்டு கிடக்கிறேன். இனி என்னை நீங்கள் மறந்துவிடுங்கள். இத்தகைய கருத்துள்ள பாசுரத்துக்கு அபிநயம் பிடிக்கும் அரையர் சுவாமிகள், மீனவர் வலைவீசுவது போல் அபிநயம் பிடித்து, அந்த வாசுதேவன் வலையுள் பராங்குச நாயகி அகப்பட்டதாகச் சித்தரித்துக் காட்டினார்.

அதை ரசித்துக் கொண்டிருந்த ராமாநுஜர், தம் கைகளால் இரு கண்களையும் காட்டினார். அதைக் கவனித்த அரையர் சுவாமிகள், அபிநயத்தை மாற்றி, தம்முடைய இரு கண்களையும் காட்டி வாசுதேவன் வலையுளே என்று அபிநயம் பிடித்தாராம்.அதாவது, ஜீவாத்மாக்களைத் தன் பால் ஈர்க்க விரும்பும் திருமால், நூலால் ஆன வலையை விரித்துப் பிடிப்பதில்லை. தன் கண்ணழகையே வலையாக விரிக்கிறார்.

அதில் மயங்கி ஜீவாத்மாக்கள் அவர் திருவடியில் வந்து சேர்கிறார்கள் என்பது இதன் தாத்பரியம். நம்மாழ்வார் போன்ற மகான்கள் தொடங்கி, நம் போன்ற சாமானியர் வரை, தன் திருமேனி அழகையே வலையாக வீசிப் பிடிக்கிறார் திருமால். `ஸுஷேண’ என்றால் அழகான சேனையை உடையவர் என்று பொருள். ஜீவாத்மாக்களாகிய நம்மை வென்றெடுக்கும் சேனையாகத் தன் திருமேனி அழகையே படையாகப் பயன்படுத்துகிறார் திருமால். `ஸு’ என்றால் அழகிய, `ஸுஷேண’ என்றால் தனது அழகான திருமேனியைப் படையாக்கி அதன் மூலம் எல்லா ஜீவாத்மாக்களையும் வெல்பவர். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 544-வது திருநாமம்.“ஸுஷேணாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வந்தால் நாமும் அவரது வலையில் சரியாக மாட்டிக் கொண்டு, மற்ற வலைகளில் சிக்காதபடி நமக்கு அருள்புரிவார்.

545. கனகாங்கதினே நமஹ: (Kanakaangadhiney Namaha)

திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் திருமாலைத் தரிசிக்கப் பிரகலாதனின் மகனான விரோசனன் வந்தான். பக்தப் பிரகலாதனின் மகனான போதும், அவனிடம் அசுரத் தன்மை மேலோங்கி இருந்தது. அவனது நிலையை நாம் நமது சந்தேகத்துக்கு விஷயம் ஆக்காமல், நம் மனதில் அத்தகைய அசுரத் தன்மைகள் இல்லாதிருக்க இறைவனை இறைஞ்சி நிற்பதே உத்தமம். இத்தகைய விரோசனன் பாற்கடலுக்கு வந்தான். திருமால் ஆதிசேஷப் படுக்கையில் யோக நித்திரையில் இருக்க, அவர் அணிந்திருந்த வைரக் கிரீடத்தைத் திருடிச் சென்றுவிட்டான் விரோசனன். உறங்குவான் போல் யோகு செய்த திருமால் விழித்துக் கொண்டு கருடனை அழைத்தார்.

விரோசனனிடம் இருந்து கிரீடத்தை மீட்டு வருமாறு கருடனுக்கு ஆணையிட்டார். பாதாள லோகம் வரை சென்ற விரோசனனைத் துரத்திப் பிடித்து அவனுடன் போரிட்டார் கருடன். அவனிடம் இருந்து திருமாலின் வைரக் கிரீடத்தை மீட்டார். மீட்டெடுத்த கிரீடத்தை எடுத்துக் கொண்டு பாதாளத்தில் இருந்து திருப்பாற்கடல் நோக்கிப் பறந்து வந்தார் கருடன்.வழியில் பிருந்தாவனத்தில் ஓர் அழகிய குழந்தையைப் பார்த்தார் கருடன். அக்குழந்தை நீலமேகம் போல் வண்ணம் கொண்டதாக, குழல் ஊதிக் கொண்டு மாடுகளை மேய்த்துக் கொண்டு இருந்தது. ஆஹா… இந்தக் குழந்தைக்குத்தான் இக்கிரீடம் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது என்று கருதிய கருடன், கிரீடத்தை அக்குழந்தையின் தலையில் வைத்துவிட்டார்.

அந்தக் குழந்தை கண்ணன் என்பதை வாசகர்களான நீங்கள் அறிவீர்கள். அந்தக் கிரீடமும் கண்ணனின் தலைக்குச் சரியாகப் பொருந்திவிட்டது. இளைஞன் வடிவில் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாள் அணியும் கிரீடம், குழந்தை கண்ணன் தலைக்கும் பொருந்தியது. திருப்பாற்கடலுக்குத் திரும்ப வந்தார் கருடன். கிரீடம் எங்கே என்று திருமால் கேட்க, வழியில் கண்ட அழகான குழந்தைக்கு வைத்துவிட்டதாகப் பதில் அளித்துவிட்டாராம் கருடன்.

இந்த நிலையில் வைரக் கிரீடத்துடன் வீடு திரும்பினான் கண்ணன். அதைக் கண்டு வியந்த யசோதை, ஏது இந்தக் கிரீடம் என்று கேட்டாள். ஏதோ ஒரு கழுகு பறந்து வந்து என் தலையில் கிரீடத்தை வைத்துவிட்டுச் சென்றுவிட்டது என்றான் கண்ணன். கண்ணா, ஏற்கனவே பல அசுரர்களால் உனக்கு ஆபத்து ஏற்படுகிறது. இதில் வைரக் கிரீடத்தை நீ தலையில் அணிந்தால், அதைத் திருடுவதற்காக வேறு யாரேனும் அசுரர்கள் வரக்கூடும். இதை நம் ஊர் பெருமாளுக்குச் சமர்ப்பித்துவிடலாம் என்றாள் யசோதை.

இப்போது திருநாராயணபுரம் எனப்படும் மேல்கோட்டையில் உள்ள ராமப்ரியன் என்ற பெருமாள்தான் அப்போது, ஆயர்பாடியில் எழுந்தருளி இருந்தார். அந்தப் பெருமாளுக்குச் சமர்ப்பித்தாள் யசோதை. கிரீடத்தை அர்ச்சகர் சாற்றியபோது, அவர் திருமேனிக்கும் அது சரியாகப் பொருந்திவிட்டது. பின்னாளில் அப்பெருமாள் திருநாராயணபுரத்துக்கு எழுந்தருளிய பின்னும், இந்த வைரக் கிரீடத்தின் நினைவாக, வைரமுடி உற்சவம் நடைபெற்று வருவதைக் காணலாம்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், திருப்பாற்கடல் பெருமாள் அணியும் கிரீடத்தை, பாலகனான கண்ணன் அணிந்தாலும், விக்கிரக வடிவில் உள்ள ராமப்ரியப் பெருமாள் அணிந்தாலும், அவர்களுக்கும் சரியாகப்பொருந்துகிறது. எப்படி மூன்று வெவ்வேறு பெருமாள்களுக்கு ஒரே கிரீடம் பொருந்தும் என்னில், அதுதான் பெருமாளின் திரு ஆபரணங்களின் சிறப்பு. அவை பகவானை விட்டுப் பிரியாமல், அவர் எடுத்துக் கொள்ளும் வடிவத்துக்கு ஏற்றபடி தங்களையும் அமைத்துக் கொள்ளும்.

திருமால் விஸ்வரூபம் எடுத்தால், அவரோடு சேர்ந்து அவரது ஆபரணங்களும் வளரும். சிறு வடிவம் கொண்டால், அவைகளும் சிறுத்துவிடும். இப்படி உலகியலுக்கு அப்பாற்பட்ட திவ்யமான ஆபரணங்களை அணிந்திருப்பதால், திருமால் `கனகாங்கதீ’ என்று அழைக்கப்படுகிறார். `அங்கத’ என்றால் தோள்வளை என்று பொருள், இங்கே அது அனைத்து ஆபரணங்களுக்கும் ஆகுபெயராகும். `கனக’ என்றால் பொதுவாக தங்கம் என்று பொருள், இங்கே அது திவ்யமான என்ற பொருளில் வருகிறது. கனகாங்கதீ என்றால் திவ்யமான திருவாபரணங்களை எப்போதும் தரித்தவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 545-வது திருநாமம்.“கனகாங்கதினே நமஹ’’ என்றுதினமும் சொல்லி வந்தால், திருமாலோடு எப்போதும் கூடி இருக்கும் பேற்றை அவரே அருள்வார்.

தொகுப்பு: திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

The post அனந்தனுக்கு 1000 நாமங்கள்! appeared first on Dinakaran.

Related Stories: