காஞ்சி வரதா! கருணை வரம் தா!!

வேதத்தின் உருவமாகிய கருடனை வாகனமாகக்கொண்டவன். அழகிய மாணிக்க மணிகளைக் கொண்டுள்ள மென்மையான ஆதிசேஷனை படுக்கையாகக் கொண்டவன். அக்னி வளர்த்து வேதம் ஓதும் அந்தணர்களின் வேத மந்திரங்களாகவே விளங்குபவன். அவனே எங்கள் இறை வனாக – தலைவனாக – விளங்குபவன். வந்து கேட்போருக்கு வாரி வாரி வரம் தரும் வள்ளலாக – பேரருளாளனாக அன்றும் இன்றும் என்றும் அருள் தரும் புண்ணியன் காஞ்சி வரதன். அந்தப் பேரருளாளனின் திருக்கோயிலில், வசந்த உற்சவத்தை ஒட்டி திவ்ய தரிசனம் பெற நாம் நுழைகிறோம். காளிதாசன் ஓர் அருமையான ஸ்லோகத்தில் காஞ்சி நகரத்தின் பெருமையை விளக்குகின்றார். மலர்களிலே ஜாதிமல்லிகை சிறந்தது.

புருஷர்களில் பரம புருஷோத்தனான ஸ்ரீமன் நாராயணன் சிறந்தவன். பெண்களிலே ரம்பை அழகானவள். நகரங்களிலே காஞ்சி உயர்வானது. இந்த காஞ்சி மாநகரத்திற்கு சத்யவிரத ஷேத்
திரம் என்றொரு பெயர் உண்டு. வரதராஜப் பெருமாள் திருக்கோயில், “பெருமாள் கோயில்” என்ற சிறப்புடன் விஷ்ணுகாஞ்சி என்று அழைக்கப்படும் சின்ன காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது. சங்ககாலத்திலேயே வடவேங்கடம் திருவேங்கடம் போன்று இத்திருப்பதியும் சிறந்து விளங்கிய பெருமையை பெருந்தேவனார் அழகாகப் பாடுகின்றார்.

“தேனோங்கு நீழல் திருவேங்கடம் என்றும்
வானோங்கு சோலை மலை என்றும்
தானோங்கும் தென்னரங்கம் என்றும்
திருவத்தியூர் என்றும்
சொன்னார்க்கு உண்டோ துயர்?’’

இதில் திருவத்தியூர் என்பதுதான் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில். 108 வைணவத் திருத்தலங்களில் கோயில் என்று திருவரங்கத்தையும், திருமலை என்று திருவேங்கடத்தையும், பெருமாள் கோயில் என்று காஞ்சிபுரத்தையும் குறிப்பிடுவது வழக்கம். காஞ்சியில் பல வைணவத் திருத்தலங்கள் உள்ளன. தொண்டை மண்டல திருத்தலங்கள் மொத்தம் 22. இதிலே 14 திவ்ய தேசங்கள் காஞ்சிபுரத்திலேயே உள்ளன. புண்ணிய நகரங்களில் ஏழில் ஒன்று காஞ்சிபுரம். பிரதிவாதி பயங்கரமண்ணாங்கராச்சாரியார் இத்தலத்தில் எழுந்தருளியிருந்து பல நூல்களை எழுதி வைணவத்தின் புகழ் பரப்பினார். இத்தலத்தை கிரேதாயுகத்தில் பிரம்மனும், திரேதாயுகத்தில் கஜேந்திர ஆழ்வாரும், துவாபரயுகத்தில் குருபகவானும், கலியுகத்தில் அனந்தனும் பூஜித்தனர்.

இனி திருக்கோயிலின் உள்ளே நுழைவோம். அழகான ராஜகோபுரம். வரதனைப் போலவே இந்தக் கோபுரத்தின் கம்பீரம் கவர்கிறது. திருக்கோயில் பெருங்கோயிலாக சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கிழக்குக் கோபுரம் ஒன்பது நிலைகள். 160 அடி உயரம். மேற்கு கோபுரம் ஏழு நிலைகள். 130 அடி உயரம். கிழக்கு கோபுரத்தை கிருஷ்ணதேவராயரும், மேற்கு கோபுரத்தை பல்லவர்களும் கட்டி உள்ளனர். ஐந்து பிரகாரங்கள். இரண்டு உயர்ந்த கட்டுமான அமைப்புகள். ஒன்று வாரணகிரி. இரண்டாவது அத்திகிரி.

வாரணகிரியில் காட்சி தருபவர் அழகிய சிங்கர் எனப்படும் நரசிம்மர். அத்திகிரியில் காட்சி தருபவர் வரதராஜ பெருமாள். மாடவீதி என்று அழைக்கப்படும் வெளிப்பிரகாரத்தின் மேற்கு கோபுரத்தின் வழியே உள்ள நுழைந்தால், நாம் அழகான நூற்றுக்கால் மண்டபம் ஒன்றை தரிசிக்கலாம். அற்புதமான சிற்ப வேலைப்பாடுகளை மண்டபத்தில் ரசிக்கலாம்.

அந்த மண்டபத்தில் உள்ள மேடையில்தான் உற்சவமூர்த்தி உற்சவ நாட்களில் காட்சி தருவார். மண்டபத்தின் வடக்கு புறம் அழகான திருக்குளத்தை தரிசிக்கலாம். அனந்த சரஸ் என்று இந்த புஷ்கரணிக்கு பெயர். இதன் நடுவிலே அழகான மண்டபம் உண்டு. இந்த புஷ்கரணிக்கு என்ன சிறப்பு தெரியுமா? நீருக்கடியில் ஒரு வெள்ளிப் பேழையில் அத்திவரதர் அருள் தந்து கொண்டிருக்கிறார். 40 வருடங்களுக்கு ஒருமுறை வெளியே வந்து பக்தர்களுக்குக் காட்சி தருவார். காரணம், அத்திவரதர் யாகத்தில் தோன்றியவர். அதனால் தகிக்கும் படியான அக்னியுடன் இருப்பவர். எனவே, அர்ச்சகர் முகமாக தன்னை அனந்தசரஸ் புஷ்கரணியில் நீருக்கடியில் பிரதிஷ்டை செய்து வைக்கும்படி கூற, அதன்படியே செய்யப்பட்டவர், இப்போது இருக்கும் உற்சவர் பழைய சீவரம் என்ற தலத்திலிருந்து எழுந்தருளச் செய்யப்பட்டவர். இந்த அத்திவரதரை 2019-ஆம் ஆண்டில் நாமெல்லாம் தரிசித்தோம்.

அனந்தசரஸ் புஷ்கரணிக்கு இன்னொரு சிறப்பு. அனந்தசரஸ் கரையில் சக்கரத்தாழ்வார் 16 திருக்கரங்களோடு அருட்காட்சி தருகிறார். பின்புறம் நரசிம்மமூர்த்தி. திருக்குளத்தின் மேற்கில் வேணுகோபாலன் மற்றும் வராகப் பெருமாள் சந்நதி. குளத்தின் வடகரையில் ஸ்ரீரங்கநாதர் சந்நதி. அதனையும் கடந்து சென்றால், ஆழ்வார் வீதி இதுதான் முதல் பிரகாரம். கருடசேவையின் போது பெருமாள் முதலில் இந்த வீதியில்தான் காட்சி தருவார். இந்த வீதியில் ஆச்சாரியார் சந்நதிகளை வரிசையாகக் காணலாம்.

ஆழ்வார் பிரகாரத்தில் இருந்து உள்ளே நுழைந்தால், ஒரு வாயில், தோடர்மால் வாயில் என்று சொல்கிறார்கள். பிரகாரத்தில் பெருமானின் கண்ணாடி அறை, வாகன மண்டபம், ஸ்ரீராமர் சந்நதி, அனந்தாழ்வார் சந்நதி, கருமாணிக்கப் பெருமாள் சந்நதி, மடைப் பள்ளி, ராப்பத்து விழா மண்டபம் மற்றும் தாயார் சந்நதி என தரிசித்துக் கொண்டே வரலாம்.இனி தாயார் சந்நதிக்குள் நுழைவோம். தாயார் திருவரங்க நாயகி போலவே காட்சி தருகிறார். இவரும் படிதாண்டாப் பத்தினிதான். பிரம்மோற்சவத்தில்கூட பெருமாள் மட்டும்தான் வலம் வருவார். தாயாருக்கு திருவீதிப் புறப்பாடு கிடையாது. தயார் பிருகு மகரிஷிக்கு புத்திரகாமேஷ்டி யாகத்தில் அவதரித்தவர். கல்யாண கோடி விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்.

இத்தாயாரின் கடைக்கண் பார்வை பட்டுவிட்டால், எந்த ஜீவனுக்கும் கடைத்தேற்றம் கிடைத்துவிடும். பெருமானை அடைய, தாமரை மலர்களால் அர்ஜித்து தவம் இருந்து வெற்றி கண்டு அடைந்த தாயாருக்கு, மகாதேவி (பெருந்தேவித் தாயார்) என்ற திருநாமம். அபய வரதக் கரங்களுடன் இரண்டு தாமரை மலர்களை ஏந்தி, அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் தாயாரை சேவித்துவிட்டு, வெளியே வருவோம்.

அடுத்த பிரகாரத்தில் கருடன் சந்நதி. அதன் எதிரே அழகிய சிங்கர் சந்நதி. ஆண்டாள், சேனை முதலிகள் சந்நதியும் பிரகாரத்தில் உண்டு. பிரகாரத்திற்கு “சேனை ஆழ்வார் திருமுற்றம்” என்று பெயர். வடகிழக்கு மூலையில் ஆலய தீர்த்தக் கிணறு உண்டு. தென்கிழக்கில் தன்வந்திரி பகவான், தென்மேற்கு மூலையில் வலம்புரி விநாயகர். பிரகாரத்தில் மலையாள நாச்சியார் சந்நதியும் உண்டு. இனி 24 படிகள் வழியே மேலே வரதராஜர் சந்நதிக்குப் போக வேண்டும். காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரங்கள் 24 படிகள்.

கருவறையில் புண்ணியகோடி விமானத்திற்கு கீழே நின்றகோலத்தில் அருள் பாலிக்கும் பேரருளாளனான வரதனை கண்குளிர சேவிக்கிறோம். கூரத்தாழ்வான் இங்கு நின்று கொண்டுதான் வரதராஜ ஸ்தவம் பாடினார். ராமானுஜருடைய ஆணையை ஏற்று கூரத்தாழ்வான் செய்த ஸ்தோத்திரத்தில் மகிழ்ந்த வரதராஜன், ‘‘என்ன வரம் வேண்டும்?’’ என்று கேட்க, தனக்கு கண்கள் வேண்டும் என்று கேட்கவில்லை. நான் பெற்ற பேறு நாலூரானும் அதாவதுதான் கண்களை இழக்கக் காரணமாக இருந்தவனும் பெறவேண்டும் என்று வேண்டிய இடம். பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே என்று காட்டிய இடம். எத்தனை அற்புதங்கள் இந்த சந்நதியில் நடந்திருக்கிறது? திருக்கச்சி நம்பிகள் என்றொரு ஆச்சாரியர்.

வரதனுக்கு தனிமையில் ஆலவட்டக் கைங்கரியம் செய்யும் பேறு பெற்றவர். அப்போது தனிமையில் இவரிடம் பெருமாள் பேசுவாராம். திருக்கச்சி நம்பிகளின் மூலம் ராமானுஜருக்கு இதே இடத்தில் நின்று ஆறு வார்த்தைகளை வரதராஜ பெருமாள் வெளியிட்டு அருளினார். இந்த வரதராஜப் பெருமாளை தியாகசீலன் என்றே கொண்டாடுகிறார்கள். வைணவத்திற்காக, தன்னுடைய பேரன்பிற்கும் பேரருளுக்கும் பாத்திரமான ராமானுஜரை விட்டு தந்தார் அல்லவா. அந்நிகழ்ச்சியும் இதே சந்நதியில் தானே நடைபெற்றது. திருவரங்கத்திற்கு ராமானுஜர் தேவை. ஆனால், ராமானுஜர் வரதனைவிட்டு வரமாட்டார். வந்தாலும் வரதர் விடமாட்டார். எப்படி அழைத்து வருவது?திருவரங்கத்தில் இருந்து அரையர் சுவாமி வந்தார்.

வரதன் முன் நின்று அபாரமாகப் பாடினார் அற்புதமாக ஆடினார். வரதன் சற்று மயங்கி இருந்த நேரம். வரதன் மகிழ்ந்துவிட்டால் வரம் கொடுத்து ஆக வேண்டும். அர்ச்சகர் முகமாக ஆவேசித்து அரையரிடம் கேட்டார்.

‘‘என் மனம் குளிர்ந்திருக்கிறது, என்ன வரம் வேண்டும்?’’
‘‘எதைக் கேட்டாலும் தருவீரா?’’
‘‘ம்.. எதைக் கேட்டாலும் வரமாகத் தருவதால் தானே வரதன் என்று என்னை அழைக்கிறார்கள்’’
‘‘தசரதன் போல் பிறகு தயங்கக் கூடாது சுவாமி.’’

‘‘அவன் தசரதன். ஆசா பாசங்களுக்கு மயங்கியவன். நான் ராமனைப் போல ஒரு வில் ஒரு சொல் என்று இருக்கும் சத்திய விரதன்.’’
‘‘பின்னால் வருந்தக் கூடாது.’’‘‘பீடிகை வேண்டாம். தளிகைக்கும் தரிசனத்திற்கும் நேரமாகிறது’’ அரையர் கேட்டார்.
‘‘உமது அபிமான புத்திரனை அரங்கருக்குத் தர வேண்டும். அவரை அழைத்துச் சொல்லவே அடியேன் வந்திருக்கிறேன்.’’
‘‘யார் நம் ராமானுஜனா?’’‘‘அவரே தான்’’

அடியார்களுக்காக பெருமாள் ராமானுஜரை, திருவரங்கச் சேவைக்கு அனுப்பி வைத்தார். அந்த வரம், இந்த இடத்தில்தான் நின்று கொண்டு, தான் அருளினார். வரம் தரும் எம்பெருமானை தரிசனம் செய்கின்றோம். எத்தனை அழகு. எத்தனை எழில்? எத்தனை கம்பீரம்? சித்ரா பௌர்ணமி அன்று நான்முகன் நேரில் வந்து எம்பெருமானை வழிபடுவதாக ஐதீகம். சித்திரை மாதம் பௌர்ணமி கழிந்த 15 தினங்களுக்கு சூரிய அஸ்தமனத்தின் போது, சூரியக் கதிர்கள் மூலவர் மீது விழும். அதைப் போலவே ஆடி மாதத்தில் வளர்பிறை தசமி அன்றும் தேய்பிறை ஏகாதசி அன்றும் ஆதிசேஷனுக்கு சிறப்பான வழிபாடு உண்டு. அன்று எம்பெருமானை ஆதிசேஷன் வழிபடுவதாகச் சொல்லுகின்றார்கள்.

‘‘கல்லார் மதிள் சூழ் கச்சி நகருள்’’ என்றும் ‘‘உலகமேத்தும் கச்சி’’ என்றும், ‘‘மதிள் கச்சியூராய்’’ என்றும் ‘‘கல்லுயர்ந்த நெடுமதிள் சூழ் கச்சி மேய களிறு” என்றும் திருமங்கை ஆழ்வார் இத்திருத்தலத்தை மங்களா சாசனம் செய்கிறார். உலகம் ஏத்தும் என்ற சொல்லாட்சி இவருக்கு பூதத்தாழ்வார் தந்திருப்பார். “உலககேத்தும் ஆழியான் அத்தியூரான்” என்ற அத்திகிரி ஊருக்கு உடையவனே என்று பாடுகின்றார். “நிறைந்த சீர் நீள் கச்சியுள்ளும் உறைபவன்” என்பது பேயாழ்வார் வாக்கு.

ஆளவந்தார் ஒருமுறை வந்த பொழுது, ராமானுஜர் குடத்தில் தீர்த்தம் எடுத்துக் கொண்டு போவதைப் பார்த்து, “யார் இவர்?” என்று திருக்கச்சி நம்பிகளிடம் விசாரித்தார். இவர் முகப்பொலிவைப் பார்த்து, இவர்தான் எதிர்காலத்தில் வைணவ சமயத்தினை வையமெங்கும் பரப்பப் போகிறவர் என்கின்ற ஆழமான தீர்க்கதரிசனத்தோடு தம் சீடர்களிடம் சொல்லிய திருத்தலம் அல்லவா இது.

சுவாமி தேசிகனும் போற்றிப் பாடிய எம்பெருமான் இவர். அற்புதமான ஸ்தோத்திரங்களை தேசிகன் செய்திருக்கிறார். காஞ்சிக்கு இன்னொரு பெருமை கருட சேவை. எம்பெருமானின் வைகாசி விசாக கருட சேவை உலக பிரசித்தி பெற்றது. ஸ்ரீவரதராஜ பெருமாளை போற்றி ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகள் வரதா நவநீதாசா வரதராஜா நின்னுகோரி என்ற ஒரு கீர்த்தனை பாடியிருக்கிறார். இந்தப் பெருமாளுக்குச் சூட்டப்படும் தங்க கொண்டைதான் எத்தனை அழகாக இருக்கிறது? உற்சவரின் இருபுறத்திலும் பூதேவி.

என்ன வியப்பாக இருக்கிறதா? உண்மைதான். உற்சவர்கள் உடையார்பாளையம் ஜமீன்தாரிடம் சேர்க்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு திரும்ப எடுத்து வந்த போது இரண்டு நாச்சியார்களும் பூதேவி நாச்சியாராகவே அமைந்துவிட்டதாம். வரதராஜ பெருமாளின் அற்புதமாக ஜொலிக்கும் மகரக்கண்டியைப் பாருங்கள். யார் அளித்தது தெரியுமா? ஆங்கிலேயனான ராபர்ட்கிளைவ். அவர் ஸ்ரீ வரதராஜனிடம் பிரார்த்தித்து வயிற்று வலி நீங்கப் பெற்று காணிக்கையாகச் சமர்ப்பித்தது இந்த ஆபரணம். வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரகாரத்தில் பல்லி தரிசனம் செய்ய ஒரு இடம் உண்டு. இதனை வழிபடுபவர்களுக்கு சகல தோஷங்களும் விலகும். செல்வ வளங்கள் பெருகும். யார் இந்த பல்லிகள்.

இரு வேறு கதைகள் உண்டு. முதல் கதை ச்ருங்கி பேர முனிவர்களின் குமாரர்களான ஹேமன், சுக்லன்தான் இந்த பல்லிகள் என்று ஒரு கதை. கல்வி பயின்றபோது கவனக்குறைவாக பல்லிகளோடு கூடிய தீர்த்தத்தை குருவுக்கு வைத்ததால், பல்லிகளாகப் பிறக்க சாபம் விட்டதாகவும், இத்தலத்தில் சாபவிமோசனம் பெற்றதாகவும் அந்தக் கதை. இன்னொரு கதை. அயோத்தி மன்னன் சகரனின் மகன் அசமஞ்சனும் அவன் மனைவியும், சாபத்தால் பல்லி உருவமாகி, இங்கு வந்து, ஸ்ரீ வரதராஜ பெருமாளை தரிசித்து, சாப விமோசனம் பெற்றதாக வரலாறு.

சாபம் என்பது என்ன? நம் தவறுகளின் விளைவு. அதைத்தான் அனுபவிக்கிறோம். அதிலிருந்து விலக என்ன செய்ய வேண்டும்? ஸ்ரீ வரதராஜரை வழிபட்டால் போதும். ஸ்ரீ வரதராஜரை தரிசித்துவிட்டு பிரசாதம் வாங்காமல் வரலாமா? அவருடைய அருளைப் போலவே பிரசாதமும் பரம சுகத்தைத் தரும். இட்லி பிரசாதம் காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்றது அல்லவா! பிரசாதத்தையும் வாங்கி சுவைத்துவிட்டு வரதராஜனின் பொன்னடிக் கமலங்களை தியானித்தபடி வரலாமே!

தகவல்கள்

1. எல்லா மாதங்களிலும் விழாக்களும் உற்சவங்களும் சிறப்பு.
2. வெள்ளிக் கிழமைகளில், தாயார் விழா ஏகாதசியில் பெருமாள் விழா வருடத்திற்கு மூன்று கருட சேவை அதுவும் தொடர்ந்து மூன்று மாதங்களில், வைகாசி பிரம்மோற்சவ கருட சேவை, ஆனி சுவாதி கருட சேவை, ஆடி பௌர்ணமி கஜேந்திர மோட்ச கருட சேவை.
3. வரதனுக்கு குடை அழகு என்பார்கள்.
4. பிரம்மன் தியாகம் செய்து வழிபட்டதால் காஞ்சி என்று பெயர்.
5. பழைய சீவரம், மங்கலகிரி, ஐயங்கார் குளம், ராஜகுளம் ஊர்களில் வருடாந்திர உற்சவம் உண்டு.
6. காஞ்சிபுரத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாலாற்றங்கரையில் காஞ்சிவரதர் இறங்கும் இடம் நடவாவி உற்சவம் சித்ரா பௌர்ணமியில் நடைபெறும் சிறப்பான உற்சவம்.

The post காஞ்சி வரதா! கருணை வரம் தா!! appeared first on Dinakaran.

Related Stories: