அமோனியா கசிவு சென்னை மக்களுக்கு மேலும் துயரம்.. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் அமைக்க வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

சென்னை: அமோனியா கசிவு சென்னை மக்களுக்கு மேலும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சென்னை – எண்ணூர் அருகே உள்ள பெரியகுப்பம் பகுதியில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலைக்கு கப்பலில் இருந்து திரவ அமோனியா கொண்டு வரும் குழாயில் கசிவு ஏற்பட்டதால் வடசென்னையைச் சேர்ந்த பெரும்பாலான பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக வரும் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.

அமோனியா கசிவு காரணமாக தொழிற்சாலைக்கு அருகே உள்ள பெரியகுப்பம், சின்னக்குப்பம், நேதாஜி நகர், உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு வாந்தி, கண் எரிச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மிக்ஜாம் புயலால் பொருளாதாரத்தையும், CPCL நிறுவனத்திலிருந்து வெளியேறிய எண்ணெய் கழிவால் வாழ்வாதாரத்தையும் இழந்து தவித்து வரும் வட சென்னை பகுதி மக்கள், அந்த பாதிப்பிலிருந்தே இன்னும் மீண்டு வராத நிலையில் தற்போது நடந்திருக்கும் அமோனியா கசிவு, அவர்களுக்கு மேலும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாயுக்கசிவால் பாதிப்படைந்திருக்கும் மக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைத்து உடனடியாக உரிய சிகிச்சை அளிப்பதோடு, வடசென்னையைச் சுற்றியிருக்கும் தொழிற்சாலைகள் அனைத்திலும் முறையான பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதை உரிய ஆய்வின் மூலம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், தமிழக அரசும் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post அமோனியா கசிவு சென்னை மக்களுக்கு மேலும் துயரம்.. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் அமைக்க வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: