மீண்டும் கூட்டணி அமைக்க முயற்சி.. பாஜக சார்பில் ஜி.கே வாசன் அதிமுகவிடம் தூது சென்று பேச்சு..!!

சென்னை: அதிமுக, பாஜக இடையே மீண்டும் கூட்டணியை உருவாக்கும் முயற்சி தீவிரமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக முயற்சி?

பாஜக சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், அதிமுகவிடம் தூது சென்று பேசியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஜி.கே.வாசன் சந்தித்தது பற்றி தகவல் வெளியாகியுள்ளது. பாஜக, அதிமுக கூட்டணி அமைய வேண்டும் என எடப்பாடியிடம் வலியுறுத்தினீர்களா? என்ற கேள்விக்கு ஜி.கே.வாசன் மழுப்பல் பதிலளித்துள்ளார். அதிமுக, த.மா.கா. கூட்டணிக்காக செல்லாவிட்டாலும் எடப்பாடி பழனிசாமியுடன் அரசியல் பேசியதாக ஜி.கே.வாசன் பேட்டியளித்துள்ளார்.

எதிரியை வீழ்த்த ஒன்று சேர எடப்பாடியிடம் வலியுறுத்தினேன்: வாசன்

நாட்டு நலன், எதிரிகளை வீழ்த்துவது குறித்து எடப்பாடியிடம் பேசியதாக கூறுவதில் இருந்தே புரிந்து கொள்ளுங்கள் என ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக, பாஜக கூட்டணி முறிந்த பிறகு 2 கட்சிகளும் மீண்டும் இணைய வேண்டும் என த.மா.கா. வலியுறுத்தியுள்ளது. எதிரியை வீழ்த்த பலமான கூட்டணி தேவை என்று எடப்பாடியிடம் வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

பாஜக சார்பில் தூது – ஜி.கே.வாசன் சூசகம்

அதிமுக, பாஜக கூட்டணி சேர்ந்தால்தான் திமுக கூட்டணியை எதிர்கொள்ள முடியும் என த.மா.கா. கூறி வருகிறது. 15 நாட்களுக்கு முன்பு ஒரு முறை எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியதையும் ஜி.கே.வாசன் பகிரங்கப்படுத்தினார்.

கூட்டணிக்கு அழைப்பு விடுத்த பாஜக

பாஜகவுடன் கூட்டு சேராவிடில் அதிமுக அரசியல் ரீதியாக உரிய விலை கொடுக்க நேரிடும் என அண்மையில் ராம சீனிவாசன் (பாஜக) கருத்து தெரிவித்திருந்தார். அதிமுக, பாஜக கூட்டணி மீண்டும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் சென்னையில் முன்பு பேட்டி அளித்திருந்தார்.

The post மீண்டும் கூட்டணி அமைக்க முயற்சி.. பாஜக சார்பில் ஜி.கே வாசன் அதிமுகவிடம் தூது சென்று பேச்சு..!! appeared first on Dinakaran.

Related Stories: