மாமல்லபுரம் அருகே உப்பு உற்பத்திக்கு மாற்றாக ரூ.4,500 கோடி மதிப்பில் 3010 ஏக்கர் பரப்பளவில் சோலார் மின் நிலையம்: மின் வாரிய அதிகாரிகள் தகவல்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே உப்பு உற்பத்திக்கு மாற்றாக ரூ.4,500 கோடி மதிப்பில் 3010 ஏக்கர் பரப்பளவில் சோலார் மின் நிலையம் அமைக்கப்பட உள்ளதாகவும், அதற்கான பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டில் குஜராத்துக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தி அதிகமாக செய்யப்படும் நகரம் தமிழகத்தின் கடலோர மாவட்டமான தூத்துக்குடி மாவட்டமாகும். தமிழகத்தில் தூத்துக்குடி, வேதாரண்யம், மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் உப்பளங்கள் அதிகளவில் செயல்படுகின்றன. இதில், உப்பளத்துக்கு பெயர் போன ஊர் தூத்துக்குடிதான்.

நாடு முழுவதும் 6 லட்சம் ஏக்கருக்கு மேல் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், தூத்துக்குடியில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. குஜராத்துக்கு அடுத்தபடியாக ஆண்டுக்கு சுமார் 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை செய்கின்றனர். கடந்த, 1974ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தில் தமிழ்நாடு அரசின் உப்பு உற்பத்தி நிறுவனம் தொடங்கப்பட்டது. இது, முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசின் நிறுவனமாகும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் மீன்பிடி தொழிலுக்கு அடுத்ததாக சிறந்து விளங்குவது உப்பு உற்பத்தி தொழில் தான். இங்கு, 5 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இதேபோல், நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. மேற்கண்ட பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் உப்பு உணவுக்கு பயன்படுத்தவும், மீன் பதப்படுத்தவும், ரசாயனம் மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இது தவிர, ஓட்டல்களுக்கு மொத்த விலையிலும், மருந்து – மாத்திரைகள், ரசாயன பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

சர்வதேச, அளவில் உப்பு உற்பத்தியில் சீனா முதலிடம் வகிக்கிறது. 2வது இடத்தில் அமெரிக்காவும், 3வது இடத்தில் இந்தியாவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. உப்பளங்களுக்கு, கடல் நீர் கொண்டு வந்து பாத்திகளில் தேக்கி வைத்து காய வைத்து விடுவார்கள். கடல்நீர், வெயிலின் வெப்பம் காரணமாக நீராவியாகிவிடும். பின்னர், அடியில் உப்பு படிவுகளாக படிந்துவிடும். இந்த, உப்பு படிவுகளை கொண்ட பாத்திகள் உப்பளங்கள் என்று அழைக்கப்படும். இங்கு, ஆண்டுதோறும் ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி பணிகள் தொடங்கி அக்டோபர் மாதம் வரை நடைபெறுவது வழக்கம்.

குறிப்பாக ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்கள்தான் உப்பு உற்பத்தி உச்சத்தை தொடும் காலம். அப்போது, பாத்தி கட்டுவது, உப்பை காய வைப்பது, வெட்டி எடுத்து சேர்ப்பது, மழையில் நனையாமல் தார்பாய் போட்டு மூடுவது, லாரியில் லோடு ஏற்றுவது என பல்வேறு வேலைகள் உப்பளத்தில் நடைபெறுகிறது. மாமல்லபுரம் அடுத்த நெம்மேலியில் இருந்து திருப்போரூர் செல்லும் சாலையில் பக்கிங்காம் கால்வாயையொட்டி அரசுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான நிலங்கள் அமைந்துள்ளது.

இந்த, நிலத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தனியார் நிறுவனம் குத்தகை அடிப்படையில் பாத்தி கட்டி கடல் நீரை கொண்டு உப்பு உற்பத்தி செய்து தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்து வந்தது. இதனிடையே குத்தகை காலம் முடிவுக்கு வந்ததால் கடந்த 2008ம் ஆண்டு முதல் உப்பு உற்பத்தி செய்யும் பணி முழுமையாக நிறுத்தப்பட்டது. இதனால், உப்பளங்கள் அமைக்கப்பட்ட இடங்கள் தரிசு நிலங்களாக காட்சியளித்தது.

இந்நிலையில், பக்கிங்காம் கால்வாயில் தமிழ்நாடு உப்பு உற்பத்தி நிறுவனம் உப்பளங்களை அமைக்க கடற்கரைக்கு அருகே இடத்தை தேர்வு செய்து குத்தகை அடிப்படையில் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தது. இந்த, கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு மூத்த ஐஏஎஸ் குழுவை அமைத்து கடலோர பகுதிகளை ஆய்வு செய்து உப்பளம் அமைக்க மாமல்லபுரம் அடுத்த சாலவான்குப்பம் பகுதியில் தொடங்கி கோவளம் வரை சரியான இடம் என கருதி வருவாய்த்துறை மூலம் 3010 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை அளவீடு செய்யப்பட்டது.

20 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் கடந்த 2019ம் ஆண்டு தமிழ்நாடு உப்பு உற்பத்தி நிறுவனத்திற்கு அரசு வழங்கியது. அங்கு, முதல் கட்டமாக கோவளம் அடுத்த முட்டுக்காடு முகத்துவாரம் பகுதியில் ராட்சத மோட்டார்கள் அமைக்கப்பட்டு, கடல் நீரை உறிஞ்சி கொண்டு வரப்பட்டு 500 ஏக்கரில் உப்பு தயாரிக்க திட்டமிடப்பட்டது. இதையடுத்து, உலகம் முழுவதும் கொடிய நோயான கொரோனா பெருந்தொற்று பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக 2020 – 2021ம் ஆண்டு உப்பு உற்பத்தி பணிகள் மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.

பின்னர், 2022ம் உப்பு உற்பத்திக்கு புத்துணர்வு கொடுக்கும் வகையில் குத்தகைக்கு வழங்கப்பட்ட நிலத்தில் கடந்த 2022ம் ஆண்டு பொக்லைன் இயந்திரம் மூலம் சமன்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, அங்கு 60 மீட்டர் அகலம், 60 மீட்டர் நீளம் கொண்ட பாத்திகள் வரிசையாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பாத்தியில் இருந்தும் மற்றொரு பாத்தியை இணைக்கும் வகையில் பிளாஸ்டிக் பைப்புகள் அமைத்து, கரைகள் பலப்படுத்தப்பட்டது.

மேலும், கடல்நீரை கொண்டு வர வாய்க்கால்கள் அமைக்கப்பட்டு, உப்பு உற்பத்திக்கு தயார் நிலையில் இருந்தது. இங்கு உற்பத்தி செய்யும் உப்பை தமிழ்நாடு அரசே நேரடியாக கொள்முதல் செய்து ரேஷன் கடை மூலம் மக்களுக்கு வினியோகிக்கவும், வெளிச்சந்தையில் விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டது. இதனிடையே, கடந்த டிசம்பர் மாதம் வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் பக்கிங்காம் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால், மழைநீர் வடியாமல் பாத்திகளில் தேங்கியதால், உப்பு உற்பத்தி பணிகள் தொடங்குவதில் தடை ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த ஒரு சில மாதங்களுக்கு அங்கு பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, உப்பு உற்பத்தி செய்வதற்கு கடல்நீரை கால்வாய்கள் மூலம் கொண்டு வந்து பாத்திகளில் காய வைப்பதற்கு முன்பு அதன் தன்மை 3 டிகிரிக்கு குறையாமல் இருக்க வேண்டும். அப்படி, இருந்தால் தான் உப்பு உற்பத்தி செய்ய முடியும்.

ஆனால், அரசு வழங்கிய இடத்திற்கு கடல்நீரை கொண்டு வரும்போது 3 டிகிரிக்கு பதில் 1.50 டிகிரி சதவீதம் மட்டும் அதன் தன்மை இருப்பதாக தமிழ்நாடு உப்பு உற்பத்தி நிறுவன அதிகாரிகளும், அரசும் தெரிவித்துள்ளது. இதனால், உப்பு தயாரிக்கும் திட்டத்தை அரசு முழுமையாக கைவிட்டது. இதையடுத்து, உப்பு நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட நிலத்தில் உப்பு உற்பத்திக்கு மாற்று ஏற்பாடாக அரசுக்கு வருவாய் வரும் வகையிலும், மக்களும் பயன் தரக்கூடிய ஒரு மாபெரும் திட்டத்தை கொண்டு வர கடந்த மாதம் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள மூத்த அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில், மாமல்லபுரம் அருகே 3010 ஏக்கரில் உப்பு நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நிலத்தில் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களான சிப்காட், டிட்கோ, டான் செம், சால்ட், மெட்ரோ ரயில், மின்சார வாரியம் சார்பில் தமிழ் நாட்டிற்கு தங்கு தடையின்றி 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க ரூ.4500 கோடி மதிப்பீட்டில் 500 மெகாவாட் முதல் 600 மெகாவாட் வரை மின்சாரம் தயாரிக்கும் வகையில் சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைக்க முடிவெடுக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள அணுமின் நிலையங்கள், அனல்மின் நிலையங்கள், காற்றாலைகள், நீர் மின் நிலையங்கள், சோலார் மின் உற்பத்தி நிலையங்கள் ஆகியவற்றின் மூலம் ஆண்டுக்கு சராசரி 17 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகள், சாப்ட்வேர் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு தேவைக்கு ஏற்ப மின்சாரம் பிரித்து வழங்கப்படுகிறது. மேலும், தமிழ்நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மின் உற்பத்தி நிலையங்கள் மூலமும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஒன்றிய அரசின் மின் நிலையங்களில் இருந்தும் ஒன்றிய தொகுப்பு மின்சாரமும் பயன்படுத்தப்படுகிறது. தேவைக்கு, ஏற்ப தனியார் நிறுவனங்களிடம் இருந்தும் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டின் மின் தேவை சராசரியாக 17 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. கடந்தாண்டு, 19 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரித்து தற்போது தினசரி மின்தேவை 23 ஆயிரம் மெகாவாட் தாண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தேவையை, பூர்த்தி செய்து தடையின்றி மின்சாரம் வினியோகிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், ஒன்றிய அரசின் மின் நிலையங்களில் இருந்து குறைவான மின்சாரம் வழங்கப்படுவதால் தேவையை பூர்த்தி செய்வதில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் அணுமின் நிலையங்கள் மற்றும் அனல் மின் நிலையங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு தினமும் 7 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் ஒதுக்கப்படுகிறது. சில, நிர்வாக காரணங்களால் 4 ஆயிரம் முதல் 4500 மெகாவாட் மின்சாரம் தான் வழங்கப்பட்டு வருகிறது.

இது, தமிழ்நாட்டிற்கு போதுமானதாக இல்லை என கூறப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட மின்சாரத்தின் அளவை தினமும் குறைத்து தமிழ்நாட்டு மக்களை ஒன்றிய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. இதனால், தடையின்றி மின்சாரம் வழங்குவதில் குழப்பம் நீடிக்கிறது. மேலும், தற்போது ஏற்படும் மின் தடையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில், தொடர்ந்து பெருகி வரும் தனியார் தொழிற்சாலைகள், சாப்ட்வேர் நிறுவனங்கள், குடியிருப்புகளுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க தினமும் 23 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது.

அதற்கான, நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசும், மின்சார வாரியமும் எடுத்து வருகிறது. மேலும், தமிழ்நாட்டின் மின் தேவையை கருதி ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் கடந்த 2016ம் ஆண்டு 2500 ஏக்கர் பரப்பளவில் 650 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய 2.5 சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு, உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் 2.65 லட்சம் வீடுகளுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது, தமிழ்நாட்டை பொறுத்தவரை காற்றாலைகளை தொடர்ந்து சோலார் மின் உற்பத்தி மூலம் 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

மேலும், அணுமின் நிலையங்கள் மற்றும் அனல் மின் நிலையங்கள் மூலம் பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் மிகப் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படுகிறது. சோலார் மூலம் மின் உற்பத்தி செய்யும் போது பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்பதால் தமிழ்நாடு அரசு வரும் காலங்களில் பல்வேறு இடங்களில் சோலார் பேனல்கள் பொருத்தி அதன் மூலம் மின் உற்பத்தி செய்து இந்தியாவில் முதன்மை மாநிலமாக திகழ பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், அடுத்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு 25 ஆயிரம் மெகாவாட் சோலார் மின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, மாமல்லபுரம் அருகே 3010 ஏக்கரில் உப்பு நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நிலத்தில் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களான சிப்காட், டிட்கோ, டான் செம், சால்ட், மெட்ரோ ரயில், மின்சார வாரியம் சார்பில் தமிழ் நாட்டிற்கு தங்கு தடையின்றி 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க ரூ.4500 கோடி மதிப்பீட்டில் 500 மெகாவாட் முதல் 600 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அங்கு, 500 மெகாவாட் முதல் 600 மெகாவாட் சோலார் மின் உற்பத்தி நிலையம் அமையும் பட்சத்தில், மாமல்லபுரம் மற்றும் திருப்போரூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மேலும், மாமல்லபுரம், திருப்போரூர் மற்றும் கோவளம் பகுதிகள் அபரித வளர்ச்சி அடையும் என கூறப்படுகிறது. 3010 ஏக்கரில் சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி விரைவில் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

* உள்ளூர் இளைஞர்களுக்கு வாய்ப்பு
ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வீட்டின் மாடியில் மேல் மானியத்தில் பொருத்தும் சோலார் பேனல்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுப்பதோடு, மின் வாரிய ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் சோலார் பொருத்துவதின் பயன்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மாமல்லபுரம் அருகே ரூ.4500 கோடி மதிப்பீட்டில் 3010 ஏக்கரில் பிரமாண்டமாக சோலார் மின் உற்பத்தி நிலையத்துக்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. இதனால், வெளி மாநில தொழிலாளர்களை அப்பணியில் ஈடுபடுத்தாமல் முழுக்க முழுக்க உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

* மின் உற்பத்தி உச்சத்தை தொடும்
தமிழ்நாட்டில் தற்போது சோலார் மின் உற்பத்தி மூலம் அதிகளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வினியோகிக்கப்படுகிறது. இதனால், தடையின்றி மின்சாரத்தை பயன்படுத்த முடியும். அடுத்த, 10 ஆண்டுகளில் இந்தியாவிலேயே தமிழ்நாடு சோலார் மின் உற்பத்தியில் உச்சத்தை தொடும் என மின்வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

The post மாமல்லபுரம் அருகே உப்பு உற்பத்திக்கு மாற்றாக ரூ.4,500 கோடி மதிப்பில் 3010 ஏக்கர் பரப்பளவில் சோலார் மின் நிலையம்: மின் வாரிய அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: