திருப்போரூர் பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலர் நியமிப்பது எப்போது? பொதுமக்கள் எதிர்ப்பார்ப்பு

​திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலர் நியமிப்பது எப்போது என பொதுமக்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.  செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் பேரூராட்சியில் செயல் அலுவலராக பணிபுரிந்த ரவி கடந்த ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்றார். தற்போது, 2 மாதங்களைக் கடந்த நிலையில் இதுவரை புதிய செயல் அலுவலர் நியமிக்கப்படவில்லை. திருக்கழுக்குன்றம் பேரூராட்சியின் செயல் அலுவலர் கூடுதலாக திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகத்தையும் சேர்த்து கவனித்து வருகிறார்.

இதன் காரணமாக பேரூராட்சி பணிகள் முழுவதுமாக முடங்கிப் போயுள்ளன. பல இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாகிறது. சாலைகளில் குப்பை அள்ளும் பணி மட்டும் நடைபெற்றாலும், அவற்றை கண்காணிக்க வேண்டிய செயல் அலுவலர் இல்லாததால் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், திருப்போரூர் பேரூராட்சியில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அப்பணியும் பாதியில் நிற்கிறது.

டெபாசிட் பணம் கட்டியவர்களுக்கு இதுவரை பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படவில்லை. பாதாள சாக்கடை மூடிகள் ஆங்காங்கே உடைந்து காணப்படுகின்றன. தெரு மின் விளக்குகள் பல இடங்களில் எரியாமல் இருளடைந்து உள்ளது. பேரூராட்சி கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் வைக்கும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் செயல் அலுவலர், ‘நான் தற்காலிக அலுவலர்தான், நிரந்தர செயல் அலுவலர் வந்த உடன் இந்த திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்‘ என்று தள்ளிப்போடும் நிலை ஏற்பட்டுள்ளதாக வார்டு உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

வாரத்தில் 2 நாட்கள் மட்டும் திருப்போரூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு வரும் செயல் அலுவலர் மற்ற நாட்கள் திருக்கழுக்குன்றம் சென்று விடுகிறார். இதன் காரணமாக முக்கிய கோப்புகளை திருக்கழுக்குன்றம் எடுத்துச் சென்று கையெழுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. ஆகவே, திருப்போரூர் பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடமிருந்தும், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களிடமிருந்தும் எழுந்துள்ளது.

The post திருப்போரூர் பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலர் நியமிப்பது எப்போது? பொதுமக்கள் எதிர்ப்பார்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: