முன்விரோத தகராறில் சமரசம் பேசுவதாக அழைத்து மீன்வளத் துறை டிரைவர் பீர் பாட்டிலால் குத்தி கொலை: 2 பேர் கைது

கூடுவாஞ்சேரி: முன்விரோத தகராறில் சமரசம் பேசுவதாக அழைத்து, மீன்வளத்துறை அலுவலக டிரைவர் பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்தனர்.நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி 18வது வார்டு, பெரியார் நகரை சேர்ந்தவர் சைமன் தேவராஜ். இவரது மகன் ஞானதாஸ் (28). கோவளம் அருகே உள்ள மீன்வளத் துறை அலுவலகத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் வேலை முடிந்து வீடு திரும்பிய ஞானதாஸ், தனது நண்பர்கள் அதே தெருவை சேர்ந்த பிரபாகரன் (29), வினித் (24) ஆகியோருடன், கூடுவாஞ்சேரி மீன் மார்க்கெட் எதிரே உள்ள திரவுபதி அம்மன் கோயில் வளாகத்தில் மது அருந்தினார். அப்போது, போதை தலைக்கேறியதும், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.இதில், ஆத்திரமடைந்த பிரபாகரன், வினித் ஆகியோர், ஞானதாசை சரமாரியாக தாக்கி, பீர் பாட்டிலை உடைத்து தலை, கழுத்து உள்பட உடல் முழுவதும் பல்வேறு இடங்களில் சரமாரியாக குத்தினர். இவரது, அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். இதை பார்த்து அவர்கள், பைக்கில் தப்பிவிட்டனர். ஞானதாஸ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

தகவலறிறிந்து கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.அதில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஞானதாஸ், பிரபாகரனுடன் மது அருந்தினார். அப்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, இருவரும் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதனால், அவர்களுக்குள் முன் விரோதம் ஏற்பட்டது. இதேபோல், கடந்த ஆகஸ்ட் மாதம் ஞானதாஸ் மது அருந்திவிட்டு சென்றார். அப்போது, அவ்வழியாக வந்த பிரபாகரனை மறித்து பாட்டிலால் தாக்கியுள்ளார்.

தொடர்ந்து ஞானதாஸ், தன்னை தாக்குவதால், அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இதற்காக தனது நண்பர், வினித்துடன் திட்டம் தீட்டினார். அதன்படி, நேற்று முன்தினம் ஞானதாசுக்கு போன் செய்தனர். அதில், அவர்களுக்குள் தகராறு வேண்டாம். சமாதானமாக போகலாம் என கூறியுள்ளனர். மேலும், சமரசம் பேசுவதற்காக, மது அருந்த அழைத்தனர். அங்கு அவரிடம் தகராறு செய்து, கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார், தலைமறைவாக இருந்த 2 பேரையும், சுமார் 2 மணிநேரத்தில் கைது செய்தனர். பின்னர் அவர்களை, செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: