திருப்போரூர் பேரூராட்சியில் டாஸ்மாக் இடமாற்றம் செய்ய கோரிக்கை

திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சியில் உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பேரூராட்சி பகுதியில், பழைய மாமல்லபுரம் சாலையில் 3 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு 500 டாஸ்மாக் கடைகளை மூடியதில், இங்குள்ள 2 கடைகள் மூடப்பட்டன. தற்போது திருப்போரூர் ரவுண்டானா அருகே ஒரே ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையை சுற்றிலும் துணிக்கடை, மருந்துக் கடை, அரிசி மண்டி, பிரவுசிங் சென்டர், பல் மருத்துவமனை ஆகியவை உள்ளன. மேலும், டாஸ்மாக் கடைக்கு நேர் எதிரில் அரசு கூட்டுறவு வங்கி ஆகியவையும் உள்ளன.

மேலும் பேருந்து நிலையத்திற்கு செல்லும் பெண்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த டாஸ்மாக் கடையை தாண்டித்தான் செல்ல வேண்டியுள்ளதால் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இங்கு மது வாங்கும் மதுப்பிரியர்கள் அருகில் உள்ள ரேஷன் கடை வாசலில் அமர்ந்து மது அருந்துகின்றனர். காலையில் கடையை திறக்க வரும் ரேஷன் கடை ஊழியர்கள் காலி மதுபாட்டில்களை அகற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் ஏற்கனவே மாவட்ட கலெடக்டர் அலுவலகம், மக்களுடன் முதல்வர் திட்டம் ஆகியவற்றில் பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் மதுக்கடையை இடமாற்றம் செய்யக்கோரி மனு அளித்தனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த மதுக்கடையை திருப்போரூர் புறவழிச்சாலை மற்றும் இள்ளலூர் சாலை, திருக்கழுக்குன்றம் சாலை ஆகிய இடங்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருப்போரூர் பேரூராட்சியில் டாஸ்மாக் இடமாற்றம் செய்ய கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: