இடைத்தரகர்களால் சிதையும் காஞ்சிப்பட்டு ஒரிஜினல் என போலி பட்டுச்சேலைகளை வாங்கி ஏமாறும் வாடிக்கையாளர்கள்: நடவடிக்கை எடுக்க நெசவாளர்கள் கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் போலி பட்டு தரகர்களால், அசல் காஞ்சிப்பட்டு என நம்பி போலி பட்டுச் சேலைகளை வாங்கி வாடிக்கையாளர்கள் ஏமாற்றமடைந்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம், பட்டுச்சேலை விற்பனைக்கு உலக புகழ் பெற்ற நகரமாக விளங்கி வருகிறது. நாள்தோறும் இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டுச் சேலைகளை வாங்க தமிழகம் மட்டுமில்லாமல் வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர்.

தரமான பட்டுச் சேலைகளை வாங்க வேண்டும் என விரும்பி வரும் வாடிக்கையாளர்கள் தற்போது ஏமாற்றத்துக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, காஞ்சிபுரத்தில் 10க்கும் மேற்பட்ட பட்டு விற்பனை கூட்டுறவு சங்கங்கள், கைத்தறி துணி நூல்துறையின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இங்கு விற்பனை செய்யப்படும் பட்டுச் சேலைகளில் அசல் ஜரிகையைக் கொண்டு நெசவாளர்கள் தரமாக நெய்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர். ஆனால், இதைத் தடுக்கும் வகையில் சில தனியார் பட்டு விற்பனை கடைகளில் வடிவமைப்பை காட்டி, தரத்தை குறைத்து விற்பனை செய்து விடுகின்றனர்.

காஞ்சிபுரத்துக்கு வெளிமாநிலத்தில் இருந்து வரக்கூடிய வாகனப் பதிவு எண்ணை குறிவைத்து, இருசக்கர வாகனங்களில் பின் தொடர்ந்து ஓட்டுனரிடம் இந்த பக்கம் செல்ல முடியாது ஒரு வழிப்பாதை எனவும், கூட்டம் நடைபெறுவதாகவும் திசை திருப்பி இடைத்தரகர்களுக்கு ஏற்ற கடைகளுக்கு வாகனங்களை அழைத்து செல்கின்றனர். இடைத்தரகர்கள் அழைத்துச் செல்லும் வாகனங்களில் வரும் வாடிக்கையாளர்கள் பட்டுச் சேலைகளை வாங்கினால், 15 சதவீதம் கமிஷனாக இடைத்தரகர்களுக்கு தனியார் பட்டு சேலை கடைக்காரர்கள் வழங்குகின்றனர்.

இடைத்தரகர்கள் ஆங்காங்கே நின்றவாறு காஞ்சிபுரத்துக்கு வரும் வாடிக்கையாளர்களை திசைதிருப்பி தரமற்ற மற்றும் அதிக விலைக்கும் பட்டுச் சேலைகளை வாங்க வைத்து கமிஷன் பார்த்து விடுகின்றனர். இதில் பெரும்பாலோனோர் போலி முகவர்கள் ஆவர். நடுத்தெரு, காந்தி சாலை, கவரத் தெரு, சின்ன காஞ்சிபுரம், வரதர், ஏகாம்பரநாதர், காமாட்சியம்மன் உள்ளிட்ட கோயில்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையங்கள் என பல்வேறு இடங்களில் சுமார் 400க்கும் மேற்பட்ட போலி தரகர்கள் காணப்படுகின்றனர். இவர்களால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றமடைவதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க பலமுறை வலியுறுத்தியதாக நெசவாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஆனால், இன்று வரை போலி தரகர்கள் பட்டின் தரத்தை சிதைத்து வருகின்றனர் என்று குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து பட்டு கூட்டுறவு சங்க நெசவாளர்கள் கூறியதாவது, காஞ்சிபுரத்தில் பாரம்பரியம் மாறாமல் பல ஆண்டுகளாக பட்டுச்சேலை நெய்து தந்து வருகிறோம். தற்போது அறிஞர் அண்ணா, முருகன், காமாட்சியம்மன், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பட்டு கூட்டுறவு சங்கங்கள் அசல் ஜரிகையைக் கொண்டு, தரமான பட்டுச் சேலைகளுக்கு வடிவமைப்பு தந்து, அவற்றை சிறந்த முறையில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப நெய்து தருகிறோம். மேலும், தரத்துக்கேற்ப அரசால் விலை நிர்ணையிக்கப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் விற்பனை செய்து வருகிறோம். ஆனால் போலி பட்டு தரகர்களால் நீண்ட தொலைவில் இருந்து பட்டுச்சேலை வாங்க வரும் மக்கள், அசல் காஞ்சிப்பட்டு என நம்பி போலி பட்டுச் சேலைகளை வாங்கி செல்கின்றனர். எனவே காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் பட்டுச்சேலை வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு போதிய அளவு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பர பதாகைகள் அமைக்கவும், இடைத்தரகர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் காஞ்சிபுரம் பட்டு கைத்தறி நெசவாளர்களின் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post இடைத்தரகர்களால் சிதையும் காஞ்சிப்பட்டு ஒரிஜினல் என போலி பட்டுச்சேலைகளை வாங்கி ஏமாறும் வாடிக்கையாளர்கள்: நடவடிக்கை எடுக்க நெசவாளர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: