கோரிக்கை மனுவை கலெக்டர் வாங்காததால் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பினர் திடீர் தர்ணா பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

பெரம்பலூர், அக்.23: பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு வேப்பந்தட்டை ஒன்றிய அளவிலான ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பினர் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால்பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பினர் நேற்று அதன் தலைவர் மருதாம்பாள் செல்வக்குமார் தலைமையில், செயலாளர் கஜேந்திரன், பொருளாளர் பாலசுப்ரமணியன், வி.களத்தூர் தலைவர் பிரபு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஒன்று திரண்டனர். அப்போது ஒன்றிய அதிகாரி தங்களை ஒருமையில் பேசி அசிங்கப்படுத்துவதாக கூறி கண்டனம் தெரிவித்தனர்.

பின்னர் அனைவரும் அங்கிருந்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தாவிடம் புகார் மனு அளிப்பதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தனர். கலெக்டர் அலுவலகக் கட்டிடத்திற்குள் அனைவரும் செல்ல முயன்றபோது வெளியே வந்த கலெக்டர் சாந்தாவிடம், ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஒருசேர கோரிக்கை குறித்து முறையிடச் சென்றனர். அவர்களிடம் கலெக்டர், உங்கள் புகார் தொடர்பாக உள்ளே இருக்கும் அதிகாரிகளிடம் தெரிவியுங்கள் என கூறிவிட்டு சென்று விட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் தங்களை கலெக்டர் மதிக்காமல் செல்கிறார், மனுவை வாங்கக்கூட மறுக்கிறார் எனக் கூறி கண்டனம் தெரிவித்து அலுவலகப் போர்டிகோவில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையறித்து அங்கு வந்த டிஎஸ்பி ஜவஹர்லால் முன்னறிவிப்பின்றி கலெக்டர் அலுவலகம் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவது தவறு, இங்கிருந்து எழுந்து ஓரமாக செல்லுங்கள் என தெரிவித்தார். பின்னர் சிறிது நேரத்தில் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் பாரதிதாசன் சம்பவ இடத்திற்கு வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் புகார் மனுவைப் பெற்றுக்கொண்டு புகார் குறித்து விசாரிப்பதாக உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எழுந்து சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு அரைமணிநேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Related Stories: