வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு: பெரம்பலூரில் தர்பூசணி பழங்கள் விற்பனை மும்முரம்

பெரம்பலூர்,ஏப்.27: மேலும் மேலும் அதிகரிக்கும் சூட்டைத் தணிக்க மேல் மருவத்தூரிலிருந்து குவிக்கப்பட்டுள்ள தர்பூசணிப் பழங்கள். பெரம்பலூரில் விற்பனை உச்சத்தில் உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் வரலாறு காணாதபடிக்கு நடப்பாண்டு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து, கடந்த மார்ச் மாதம் தொடங்கி தினமும் வெப்பத்தின் அளவு சதமடித்து 100 டிகிரிக்கு குறையாமல் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள பொதுமக்கள் இளநீர், நீர்மோர், எலுமிச்சை சர்பத் மற்றும் ரசாயன குளிர் பானங்களை வாங்கிப் பருகுவதோடு,குளிர்ச்சியும் நீர்ச்சத்தும் கொண்ட தர்பூசணி பழங்களையும், முலாம்பழங்களையும், வெள்ளரிப்பிஞ்சுகளையும் வாங்கி சாப்பிட்டு சமாளித்து வருகின்றனர். இன்னும் நொங்கின் வருகை அதிகரிக்காத நிலையில் முலாம் பழங்களின் விற்பனையும் தர்பூசணியின் விற்பனையும் முந்திக்கொண்டு நிற்கிறது.

அதிலும் குறிப்பாக நீர்ச்சத்தும், குளிர்ச்சியும் கொண்ட தர்பூசணி பழங்கள், மக்களின் எதிர் பார்ப்பை எகிறச் செய்து வருகிறது. இதற்காக மேலும் மேலும் அதிகரிக் கும் வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க மேல் மருவத்தூரில் இருந்து இறக்குமதி செய்யப் பட்டுள்ள தர்பூசணி பழங்கள், பெரம்பலூர் நகரின் பல்வேறு இடங்களில் மலை போல் குவிக்கப்பட்டுள்ளன. தர்பூசணி பழங்கள் கிலோ ரூ.20க்கு விலை வைத்து விற்கப்படுவதால், ஒவ்வொரு பழமும் குறைந்தபட்சம் ரூ. 60க்கு மேல் விலை வைத்து விற்கப்படுகிறது. தனியாகக் கீற்று பத்து ரூபாய் என பெப்பர்- சால்ட் பொடிகளுடன் தூவி விற்கப்பட்டாலும், பேப்பர் கப்புகளில் துண்டு துண்டாக்கி பத்து ரூபாய்க்கு விற்கப்பட்டாலும், குடும்பத்தையே சமாளிக்க வேண்டுமென்றால் மொத்தமாக பழங்களையே வாங்கி செல்வதே சிறந்தது எனக் கருதி பலரும் முழுமையான தர்பூசணி பழங்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். இதனால் தற்போது தர்பூசணி விற்பனை மும்முரமாக நடைபெறுகிறது.

The post வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு: பெரம்பலூரில் தர்பூசணி பழங்கள் விற்பனை மும்முரம் appeared first on Dinakaran.

Related Stories: