6 ஆண்டுகளுக்கு பின் அபயாரண்யம் முகாமில் வளர்ப்பு யானைகள் பராமரிப்பு

கூடலூர்,ஆக.22: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் 27 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தெப்பக்காடு, பாம்பேக்ஸ், ஈட்டி மரம் ஆகிய 3 முகாம்களில் இந்த யானைகள் பராமரிக்கப்பட்டு வந்தன. கடந்த 6 வருடங்களுக்கு முன் தெப்பக்காடு மற்றும் அபயாரண்யம் ஆகிய 2 இடங்களில் மட்டுமே முகாம்கள் செயல்பட்டன. இங்குள்ள முகாம்களில் தெப்பக்காடு பகுதியில் உள்ள முகாமில் மட்டுமே சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. மற்ற இடங்களிலுள்ள முகாம்களுக்கு பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.

ஆனால் அபயாரண்யம் முகாம் பிரதான சாலையோரத்தில் இருப்பதால் அந்த வழியாக வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி எந்தவித அனுமதியும் இன்றி, முகாம்களுக்கு வருவதை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பல்வேறு பிரச்னைகளும் ஏற்பட்டதால் இங்குள்ள யானைகளை  பாம்பேக்ஸ்  மற்றும் ஈட்டி மரம் ஆகிய 2 இடங்களில் முகாம்கள் உருவாக்கப்பட்டு கடந்த 6 வருடங்களுக்கு முன் அங்கு கொண்டு செல்லப்பட்டன. இந்நிலையில் ஏப்ரல் மாதம் பெய்த கன மழையில் பாம்பேக்ஸ் முகாமில் மரங்கள் விழுந்து முகாம் சேதமடைந்தது. ஈட்டி மரம் முகாம் தற்காலிக முகாம் என்பதால் அதுவும் மூடப்பட்டது. இதையடுத்து அனைத்து யானைகளும் தெப்பக்காடு முகாமிற்கு கொண்டு வரப்பட்டன. யானைகளை பராமரிப்பதற்கு வசதியாக மீண்டும் அபயாரண்யம் முகாமில் யானைகளை பராமரிக்க வனத்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.  தற்போது மூர்த்தி, வசீம், ஜம்பு, விஜய், இந்திரா, கிருஷ்ணா, சீனிவாசன், சங்கர்,  இந்தர் ஆகிய 9 யானைகள் அபயாரண்யம் முகாமிற்கு  கடந்த இரு தினங்களுக்கு முன் கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

பாம்பேக்ஸ் பகுதியில் உள்ள முகாம் மழையால் சேதம் அடைந்ததால் தற்காலிகமாகவே இந்த  முகாமில் யானைகள் பராமரிக்கப்படுவதாகவும், தேவைப்படும் நேரத்தில் மீண்டும் அங்குள்ள முகாம் சீரமைக்கப்பட்டு யானைகள் எப்போது வேண்டுமானாலும் கொண்டு செல்லப்படலாம் எனவும், வனப்பகுதியில் பிடிபடும் காட்டு யானைகளை கூண்டில் அடைத்து பழக்குவதற்கு பாம்பேக்ஸ் முகாமில் கிரால்(மரக்கூண்டு) உள்ளிட்ட வசதிகளும் பாதுகாப்பும் உள்ளது என்றும்  வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories:

>