சென்னை - செய்யூர் இடையே எண்டத்தூர், அரியனூர் வழியாக பழைய நேரப்படி அரசு பஸ்சை இயக்க வேண்டும்

செய்யூர்,  மார்ச் 19: சென்னையில் இருந்து மதுராந்தகம், ஜமீன் எண்டத்தூர், அரியனூர் வழியாக செய்யூர் வரை இயக்கப்படும் அரசு பஸ்சை பழைய நேரப்படி மீண்டும் இயக்க வேண்டும். மேலும், சென்னையில் இருந்து மதிய நேரத்தில் நேரடியாக செய்யூருக்கு இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், ஜமீன் எண்டத்தூர், கல்பட்டு,  அரியனூர், அம்மனூர் வழியாக செய்யூர் வரை அரசு விரைவு பஸ் (தஎ 83) இயக்கப்படுகிறது. இந்த பஸ், காலை 8 மணியளவில் சென்னையில் இருந்து புறப்பட்டு மதியம் 11.40 மணிக்கு மதுராந்தகம் சென்று, அங்கிருந்து செய்யூருக்கு புறப்பட்டு சென்றடையும். பின்னர், செய்யூரில் இருந்து புறப்பட்டு மாலை 5 மணியளவில் சென்னைக்கு புறப்படும். மீண்டும் சென்னையில் இருந்து புறப்பட்டு இரவு 8 மணியளவில் மதுராந்தகம் வந்து, அங்கிருந்து செய்யூர் சென்று, இரவு தங்கி விட்டு, அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு செல்லும். சென்னை பணிமனையில் இருந்து இயக்கிய நேரம் என்பதால், இந்த பஸ் நிறுத்தப்படாமல் தொடர்ந்து இயக்கப்பட்டது. வசூலும் அதிகரித்துள்ளது என பொதுமக்கள் கூறுகின்றனர்.

இந்த சுமார் 3 ஆண்டுகளுக்கு முன் மதுராந்தகம் பணிமனைக்கு மாற்றப்பட்டது. அதன் பின் இந்த பஸ் சரியான நேரத்தில் இயக்கப்படுவதில்லை. சென்னையில் இருந்து நேரிடியாக செய்யூரிக்கு இயக்குவதும் இல்லை. மதிய நேரத்தில் சென்னையில் இருந்து அச்சிறுப்பாக்கம் வரை இயக்கப்பட்டு, மதுராந்தகம் வந்து, பின்னர், செய்யூருக்கு இயக்கப்படுகிறது. இதனால், சென்னையில் இருந்து வரும் பயணிகள் மதுராந்தகத்தில் இறங்கி பஸ் வரும் வரை காத்து கிடக்கும் அவலநிலை உள்ளது. இதையொட்டி, அவர்கள், குறிப்பிட்ட நேரத்தில் வீடு சென்று முடியவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் மதுராந்தகம் பணிமனை அதிகாரிகளுக்கு தகுந்த ஆலோசனை வழங்கி, சென்னை பணிமனையில் இருந்து இயக்கிய நேரத்தில் பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Related Stories: