மாமல்லபுரம் மகளிர் காவல் நிலைய வளாகத்தில் பறிமுதல் வாகனங்களால் சுகாதார சீர்கேடு: உடனே அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்

மாமல்லபுரம், மார்ச் 13: மாமல்லபுரம் காவல் நிலையம் நகரின் முக்கிய பகுதியான கோவளம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இந்த காவல் நிலைய எல்லையில் சுற்றுலா அலுவலகம், தொல்லியல் துறை அலுவலகம், பேரூராட்சி, பொதுப்பணித் துறை அலுவலகம், கோயில்கள் மற்றும் பல்வேறு கிராம ஊராட்சிகள் உள்ளன. மாமல்லபுரம் காவல் நிலைய  எல்லைக்குள் விபத்து, சாராயம் கடத்தல், மண் கடத்தல், திருட்டு, வழிப்பறி  உள்பட பல்வேறு குற்ற சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மகளிர்  காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள்  அனைத்தும் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும், மண்ணோடு மக்கி நாசமாகி  குப்பை கோல் குவிக்கப்பட்டுள்ளன.இந்த பகுதியில் பாம்பு உள்பட  பல்வேறு விஷப்பூச்சிகளும் உலா வருகின்றன.

இதனால், இங்கு பல்வேறு காரணங்களுக்காக புகார் அளிக்க வரும் பொதுமக்கள் மற்றும் விசாரணைக்கு  வருபவர்கள் மட்டுமின்றி, பணியில் உள்ள போலீசாரும் அச்சத்துடனே இருக்கின்றனர். காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டு, பல மாதங்களாக குப்பை குவியல்போல் கிடக்கும் இந்த வாகனங்கள் மண்ணோடு, மண்ணாகி கிடப்பதால், அந்த பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. முக்கியமாக இந்த காவல் நிலையத்தை ஒட்டி சுற்றுலா அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் மற்றும் காவல் நிலையத்தைச் சுற்றி ஏராளமான குடியிருப்புகளும் அமைந்துள்ளது. மழை பெய்யும் நேரத்தில் இந்த வாகனங்களில் தேங்கும் நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் காவலர்களை கடிப்பதால் பல்வேறு விதமான தொற்று நோய் தாக்கும் அபாயம் உள்ளது.

காவல் நிலையத்தில் புகார் அளிக்க வரும் பொதுமக்கள், பல்வேறு வழக்குகளில் விசாரணைக்கு வருபவர்கள் ஒரு சில நேரங்களில் ரோந்து பணி அல்லது, உயர் அதிகாரிகளின் கூட்டத்தில் கலந்து கொண்ட இன்ஸ்பெக்டர் வரும் வரை, சற்று அமர்ந்து ஓய்வு எடுக்கின்றனர். அந்த நேரத்தில் பாம்புகள் வருவதும், அதனை கண்டு அவர்கள், அலறியடித்து கொண்டு ஓடுவதும் வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக, போலீசாரும் இரவு பணியின்போது, ஒரு வித பயத்துடன் வேலை பார்ப்பதாக கூறப்படுகிறது. எனவே, காவல்துறை உயரதிகாரிகள் உடனடியாக தலையிட்டு மாமல்லபுரம் மகளிர் காவல் நிலைய வளாகத்தில் பல மாதங்களாக பாழடைந்து வீணாக கிடக்கும் பறிமுதல் வாகனங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.

Related Stories: