தமிழ்நாடு போயர் சமுதாய மாநில மாநாடு

கோவை, மார்ச் 3:  தமிழ்நாடு போயர் சமுதாய மாநில மாநாடு கோவை சுந்தராபுரம் செங்கப்ப கோனார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்தது. மாநில தலைவர் பூபதி தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் நாகராஜ், சிவகுமார், தாமோதரன், சிங்கை கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொள்கை பரப்பு செயலாளர் சவுந்தரராஜன் வரவேற்றார்.

இதில், தமிழக அரசின் ஓய்வுபெற்ற முன்னாள் தலைமை செயலர் டாக்டர் ராமமோகன ராவ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் பேசுகையில், ‘’அரசியல் அதிகாரத்தில் இதுவரை பங்கேற்பு எதுவும் பெறாத மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ள பல்வேறு சமுதாய மக்களை ஒன்றிணைத்து ஒரு மிகப்பெரிய சமுதாய அமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். அனைத்து சமுதாயத்தில் உள்ள பெரும் செல்வந்தர்கள் தங்களது வருமானத்தில் ஐந்து சதவீதம் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு செலவிட வேண்டும். எல்லா மக்களுக்கும் எல்லா வாய்ப்புகளும் கிடைக்க வேண்டும்.

இதற்காக பல செயல்திட்டங்கள் உருவாக்கப்படும். ஊர் ஊராக சென்று மக்களை சந்தித்து சமுதாய ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்படும்’’ என்றார். இதையொட்டி, பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காக டாக்டர் ஆர்.எம்.ஆர். பாசறை அமைப்பு துவக்கப்பட்டது. இதன் தலைமை நிலைய ஒருங்கிணைப்பாளராக கஜலட்சுமி ரகு, கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக அனந்தபத்மநாபன், நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக விடுதலை களம் நாகராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

Related Stories: