திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

ஈரோடு, மார்ச் 2:   ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு கல்லூரியின் செயலாளர் எஸ்.டி.சந்திரசேகர் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் மரகதம் ஆண்டு அறிக்கையை வாசித்தார். விழாவில் பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் காளிராஜ் மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.  இதில் துணை வேந்தர் காளிராஜ் பேசுகையில், ‘‘நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது தகவல் தொடர்பு, தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி, உயர் கல்வி, வளர்ச்சிக்கான அறிவை பயன்படுத்துதல் ஆகியவற்றை பொறுத்து அமைகிறது. இந்த நாட்டின் முக்கிய சொத்தாக இளைஞர்கள் திகழும்போது, சமுதாயத்தில் கல்வி என்பது சக்திவாய்ந்த ஆயுதமாக மாறும். புதிய கண்டுபிடிப்பில் அதிகமான ஆர்வம் செலுத்த வேண்டும். நவீன தகவல் தொழில்நுட்ப அறிவை வளர்த்து கொண்டால், வேலை வாய்ப்புகளை எளிதாக பெற்றுக்கொள்ளலாம்,’’ என்றார். இந்த விழாவில், இளங்கலை பட்டப்படிப்பு முடித்த 1,402 மாணவிகளுக்கும், முதுகலை பட்டப்படிப்பு முடித்த 456 மாணவிகள் என மொத்தம் 1,858 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் கல்லூரியின் பொருளாளர் அருண், இணைச்செயலாளர் நல்லசாமி, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ராஜமாணிக்கம், குலசேகரன், வேலுமணி, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சாமுண்டீஸ்வரி மற்றும் பேராசிரியர்கள், மாணவிகள், பெற்றோர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: