உக்கடம் மேம்பால பணிகள் 2 ஆண்டுகளுக்குள் முடியும்

கோவை, பிப்.28:  கோவை உக்கடம் - ஆத்துபாலம் இடையே கட்டப்பட்டு வரும் மேம்பாலம் பணிகள் இன்னும் 2 ஆண்டு காலத்திற்குள் முடியும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவை உக்கடம்-ஆத்துபாலம் சாலை பொள்ளாச்சி செல்வதற்கும், வளையார் வழியாக கேரளா மாநிலம் செல்வதற்கும் முக்கிய சாலையாக உள்ளது. இச்சாலையில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக கடந்த 2018ம் ஆண்டு உக்கடம்-ஆத்துபாலம் இடையே மேம்பாலம் கட்டும் பணி ஏப்ரல் மாதம் துவங்கியது. முதல் கட்டமாக உக்கடம் முதல் கரும்புக்கடை இடையே உள்ள மேம்பால பணிகளுக்கு ரூ.216 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

இதில் 55 தூண்கள் அமைக்க திட்டமிடப்பட்டு 40 தூண்கள் வரை பணிகள் நிறைவடைந்துள்ளது. 15க்கும் மேற்பட்ட தூண்களில் ஓடுதளம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனிடையே கரும்புக்கடை முதல் ஆத்துபாலம் வரை இரண்டாம் மேம்பால பணிகளுக்காக தமிழக அரசு ரூ.265 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.முதல் கட்ட பணிகள் இன்னும் 8 மாதத்திற்குள் முடிக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த பணிகள் நிறைவடைந்த உடன் 2ம் கட்ட பணிகள் துவக்கப்பட உள்ளது. இந்த 2ம் கட்ட பணிகளை இன்னும் 2 ஆண்டிற்குள் முடிக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே உக்கடம்-ஆத்துபாலம் மேம்பாலத்தில் வாகன ஓட்டிகள் வசதிக்காகவும், மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் 3 இடங்களில் இறங்குதளங்கள் அமைக்கப்பட உள்ளது.

போத்தனூர் பிரிவு, ஆத்துபாலம், உக்கடம் பேருந்து நிலையம் ஆகிய மூன்று பகுதிகளில் யூ வடிவிலான ஏறுதளம் மற்றும் இறங்குதளங்கள் அமைக்கப்பட உள்ளன. பொள்ளாச்சியில் இருந்து வரும் வாகனங்கள் போத்தனூர் பிரிவு இறங்குதளத்தை பயன்படுத்தி டவுன்ஹால் செல்லலாம். உக்கடம் பேருந்து நிலையம் இறங்குதளம் மூலம் சுங்கம் பைபாஸ் செல்லலாம். ஆத்துபாலம் இறங்குதளம் மூலம் பாலக்காடு சாலை செல்லலாம். இதனால் போக்குவரத்து நெரிசல் குறையும், வாகன ஓட்டிகளும் பயன் அடைவார்கள். இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், உக்கடம் -ஆத்துப்பாலம் மேம்பாலம் முதல் கட்ட பணிகள் முடிந்தவுடன், விரைவாக 2ம் கட்ட பணிகளும் துவங்கப்பட உள்ளது. உக்கடம் - ஆத்துபாலம் மேம்பால பணிகள் முழுமையாக இன்னும் இரண்டிற்குள் முடிக்கப்படும், என்றனர்.

Related Stories: