தூத்துக்குடி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாற்றுத்திறன் குழந்தைகளுக்காக ரூ.16.75 லட்சத்தில் வாகனம்

தூத்துக்குடி, பிப்.28:தூத்துக்குடி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்காக ரூ.16.75 லட்சம் மதிப்புள்ள வாகனத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ பள்ளிக்கு வழங்கினார். தூத்துக்குடி மாநகராட்சி நகர்ப்புற வாழ்வாதாரம் நிதியின் கீழ் தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனுடைய குழந்தைகள் பயன்படுத்துவதற்காக ரூ.16.75 லட்சம் மதிப்பில் பள்ளி வாகனம் வழங்கும் விழா கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமையில் நடந்தது. தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், எம்எல்ஏக்கள் எஸ்.பி.சண்முகநாதன், சின்னப்பன் முன்னிலை வகித்தனர்.அமைச்சர் கடம்பூர்ராஜூ பள்ளிக்கு வாகனத்தை வழங்கி கொடியசைத்து துவக்கி வைத்து பேசியதாவது,தமிழக அரசு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் தொடர்ந்து பள்ளிக்கல்வி துறை மூலம் மாணவ, மாணவிகள் இன்றைய விஞ்ஞான வளர்சிக்கேற்ப அறிவை பெருக்கி கொள்ளும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பள்ளிக்கு சென்று கல்வி கற்க அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுத்ததன் அடிப்படையில் இன்று ஏராளமானோர் பள்ளிக்கு வருகின்றனர். தூத்துக்குடி மாநகராட்சி நகர்ப்புற வாழ்வாதாரம் நிதியின்கீழ் சிவந்தாகுளம் தூத்துக்குடி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனுடைய குழந்தைகள், பெற்றோர்களுடன் பள்ளிக்கு வரஏதுவாக ரூ.16.75 லட்சம்  மதிப்பில் பஸ் வழங்கப்பட்டது. இப்பள்ளியில் 5 வயது மற்றும் 6-14 வயது வரையிலான குழந்தைகள் என இரு பிரிவுகளாக மொத்தம் 60 மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி, பிஸியோதெரபி, கற்றல், கேட்டல் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பேரூரணி, மாப்பிள்ளையூரணி, துப்பாஸ்பட்டி, பழையகாயல் போன்ற பகுதிகளில் இருந்து வரும் 50 மாற்றுத்திறனுடைய குழந்தைகள் இதன் மூலம் பயனடைவார்கள் என்றார்.

தொடர்ந்து அமைச்சர் சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளியில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு பயிற்சியளிப்பதையும், அங்குள்ள சிறப்பு வசதிகளையும் பார்வையிட்டார்.  மேலும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு மாநகராட்சி மூலம் மதிய உணவு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள மாநகராட்சி ஆணையரிடம் தெரிவித்தார்.நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாநகராட்சி செயற்பொறியாளர் பார்த்திபன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் செல்வகுமார், உதவி செயற்பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் பிரின்ஸ், மாநகராட்சி சுகாதார மருத்துவ அலுவலர் அருண்குமார், சுகாதார அலுவலர்கள் ஸ்டாலின், ராஜசேகர், முக்கிய பிரமுகர்கள் ஆறுமுகநயினார், டேக் ராஜா மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.இதற்கிடையில் பள்ளியில் இருந்து ஆட்சி மொழி சட்ட வாரத்தை முன்னிட்டு மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் கடம்பூர் ராஜூ துவக்கி வைத்தார்.

Related Stories: