பள்ளிகளில் ஆண்டு விழா கலைநிகழ்ச்சிகளின்போது அதிக ஒளி மின் விளக்குகளால் மாணவர்கள் பாதித்தால் நடவடிக்கை

வேலூர், பிப்.26:அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆண்டு விழாவின்போது மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலைநிகழ்ச்சியில் அதிக ஒளி கொண்ட மின் விளக்குகளால் மாணவர்கள் பாதிக்கப்பட்டால் தலைமை ஆசிரியர் அல்லது நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், தனியார் நர்சரி, மெட்ரிக் பள்ளிகளில் மாணவர்களின் தனித்திறமைகளை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும், ஆண்டு விழாக்கள் மற்றும் விளையாட்டு விழா, கலைச்சார விழா போன்ற விழாக்கள் நடத்தப்படுகிறது. அப்போது, நடன போட்டிக்கு பயன்படுத்தப்படும் அதிக ஓளி கொண்ட மின்விளக்குகளை பயன்படுத்தி மேடைகள் அமைக்கப்படுகிறது. இதனால் மாணவ, மாணவிகளுக்கு கண்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்ததுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்த ஆண்டிற்கான கல்வி ஆண்டு இன்னும் ஒரிரு மாதங்களில் முடிய உள்ளதால் இதனால் தற்போதே பள்ளிகளில் ஆண்டு விழா தொடங்கி உள்ளது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டு விழாவில் அதிகபடியான மின் வெளிச்சத்தால் மாணவர்களின் கண்கள் பார்வை பாதிக்கப்பட்டது. இதனால் எதிர்காலத்தில் பள்ளிகளில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பாடாமல் இருக்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதன்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆண்டுவிழா மற்றும் அனுமதிக்கப்பட்ட இதர விழாக்கள் நடைபெறும் போது, அதிக ஒளிக்கொண்ட அலங்கார மின் விளக்குகள் பயன்படுத்தக்கூடாது. பரிந்துரைக்கப்பட்ட மின்சாதன அமைப்புகள் மட்டுமே அமைத்திட வேண்டும். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

இந்த நடைமுறைகளை பின்பற்றாமல் விழா நடத்தி, பாதிப்புகள் ஏதாவது ஏற்பட்டால் அதற்கு அந்தபள்ளி தலைமை ஆசிரியரும், பள்ளி நிர்வாகமுமே முழுபொறுப்பேற்க நேரிடும். எனவே அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் முழு கவனத்துடன் விழாக்களை நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: