ஊராட்சி செயலாளர் வீட்டில் விஜிலென்ஸ் அதிரடி சோதனை முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை காட்பாடி அருகே பரபரப்பு

திருவலம், ஏப்.26: காட்பாடி அருகே ஊராட்சி செயலாளர் வீட்டில் விஜிலென்ஸ் அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா திருவலம் பேரூராட்சிக்குப்பட்ட மேட்டுப்பாளையம் பழைய காலனி குடியிருப்பில் வசித்து வருபவர் பிரபு(49). இவர் பொன்னை அடுத்த பாலகுப்பம் கிராம ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஊராட்சி செயலர் பிரபு காட்பாடி ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் ஊராட்சி செயலாளராக பணியாற்றியபோது கடந்த 2011-17ம் ஆண்டில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு, சொத்துக்களை வாங்கியுள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது.

அந்த குற்றச்சாட்டுகளின் பேரில் வேலூர் லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் எஸ்.விஜய் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று காலை பிரபுவின் வீட்டில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பிரபு வீட்டில் இல்லாததால் வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை செய்து கொண்டிருந்தபோது எதிர்பார்க்காத பிரபு வீட்டிற்கு வந்தபோது லஞ்ச ஒழிப்புத்துறையினரை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதிகாரிகள் பிரபுவிடம் பல்வேறு சந்தேகங்களை கேட்டு கேள்விகளை எழுப்பினர். அதில் திக்கு முக்காடிய பிரபு செய்வதறியாமல் விழிபிதுங்கி நின்றார். இதனையடுத்து அதிகாரிகள் பிரபுவிடம் இருந்த முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை செய்தனர். அதன்பேரில் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் பல்வேறு வழக்குப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

The post ஊராட்சி செயலாளர் வீட்டில் விஜிலென்ஸ் அதிரடி சோதனை முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை காட்பாடி அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: