நீல நிறத்தில் புதிய தாழ்தள டவுன் பஸ்கள் இயக்கம் வேலூரில் இருந்து இரு வழிதடங்களில்

வேலூர், ஏப்.23: வேலூரில் இருந்து இரு வழிதடங்களில் நீல நிறத்தில் புதிய தாழ்தள டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இது பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் 21 ஆயிரம் பஸ்கள் இயங்கி வரும் நிலையில் 10 ஆயிரம் பஸ்கள் 15 ஆண்டுகளை கடந்து விட்டன. ஒன்றிய அரசு 15 ஆண்டுகள் உபயோகித்த பஸ்களை பயன்படுத்தக் கூடாது என்று அறிவித்துள்ளதால் தமிழக அரசின் போக்குவரத்து துறை பழைய பஸ்களுக்கு பதில் புதிய பஸ்களை வாங்குவதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளது. அதன்படி சட்டசபையில் கடந்த நிதி நிலை அறிக்கையில் 1000 புதிய பஸ்கள் வாங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து இப்போது முதல் கட்டமாக 600 பஸ்களை கொள்முதல் செய்ய அரசு ஒப்பந்தப்புள்ளி கோரி உள்ளது.

இதில் 150 பஸ்கள் முழுமையான தாழ்தள பஸ்களாக வாங்கப்பட்டுள்ளது. தரமான, வசதியான போக்குவரத்து சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்காக புதிய பஸ்களை வாங்கும் பணி விரைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக ஒவ்வொரு போக்குவரத்து மண்டலத்துக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் நீல நிறத்தில் தாழ்தள அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேலூர் போக்குவரத்து மண்டலத்துக்கு உட்பட்ட வேலூரிலிருந்து இரு வழித்தடங்களுக்கு புதிய நீல நிறத்தில் தாழ்தள டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பழைய அரசு பஸ்களுக்கு மாற்றாக தற்போது நீல நிற பஸ்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மஞ்சள் நிற புதிய பிஎஸ் 4 பஸ்கள் இயக்கத்துக்கு கொண்டுவரப்பட்டன. இந்த பஸ்களில் டிரைவர் இருக்கை அமைப்பு, அவசர கால பட்டன், பயணி இருக்கை இடைவெளி கூடுதலாக இருந்ததால், நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகளிடம் பஸ்கள் வரவேற்பை பெற்றன. புறநகர் பஸ்களை போலவே அரசு டவுன் பஸ்கள் நிறம் மாற்றப்பட்டுள்ளது. காலாவதியாகி, ஓரங்கட்டப்பட்ட பஸ்களுக்கு மாற்றாக புதிதாக இள நீல நிற பஸ்கள் இயக்கத்துக்கு கொண்டு வரப்பட உள்ளது. வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் 2 இளநீல நிற பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக காட்பாடி- பாகாயம் வழித்தடத்திலும், வேலூர் பழைய பஸ்நிலையத்திலிருந்து தெங்கால் கிராமத்திற்கும் இரு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இயங்கி வரும் டவுன் பஸ்களில் 40 முதல், 45 இருக்கைகளும், 20 முதல், 25 பேர் வரை நின்று செல்லும் வகையில் அமைப்பும் உள்ளது. புதிதாக வந்துள்ள பிஎஸ்-6 பஸ்களில் இருக்கை அமைப்பு பழைய நிலையே தொடரும். 30 பயணிகள் வரை சிரமமில்லாமல் நின்று செல்ல முடியும். இந்த பஸ்கள் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post நீல நிறத்தில் புதிய தாழ்தள டவுன் பஸ்கள் இயக்கம் வேலூரில் இருந்து இரு வழிதடங்களில் appeared first on Dinakaran.

Related Stories: