ஒரே நாளில் ₹12.64 கோடிக்கு டாஸ்மாக் மதுபானம் விற்பனை 3 நாட்கள் விடுமுறை எதிரொலி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில்

வேலூர், ஏப்.18: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உட்பட 3 மாவட்டங்களில் நேற்று முன்தினம் ஒரேநாளில் ₹12.64 கோடிக்கு டாஸ்மாக் மது விற்பனை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நாளை நடக்கிறது. தேர்தலை அமைதியாகவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க துணை ராணுவம், வெளிமாநில அதிரடிப்படை போலீசார் பாதுகாப்பு பணிக்கு வந்துள்ளனர்.

இந்நிலையில் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மதுக்கூடங்கள், நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்களில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் நேற்று முதல் நாளை வரையிலும், மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு வரும் 21ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்றும் என மொத்தம் 4 நாட்கள் மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை என்பதால் மதுப்பிரியர்கள் நேற்றுமுன்தினம் இரவு அதிகளவில் டாஸ்மாக் கடைகளில் திரண்டு மது வகைகளை வாங்கிச் சென்றனர்.

இதனால் வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை களைகட்டியிருந்தது. வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் மொத்தம் 106 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் நேற்றுமுன்தினம் ஒரேநாளில் ₹7.25 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 85 கடைகளில் ₹5.39 கோடிக்கு என 3 மாவட்டங்களில் சேர்த்து ₹12.64 கோடிக்கு விற்பனை நடந்ததாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ஒரே நாளில் ₹12.64 கோடிக்கு டாஸ்மாக் மதுபானம் விற்பனை 3 நாட்கள் விடுமுறை எதிரொலி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் appeared first on Dinakaran.

Related Stories: