பந்தய குதிரைகளுக்கு கொட்டகை அமைக்கும் பணி துவக்கம்

ஊட்டி, பிப். 20:குதிரை பந்தயம் ஏப்ரல் மாதம் துவங்கும் நிலையில் குதிரை பந்தய மைதானம் மற்றும் குதிரைகள் தங்கும் கொட்டகைகள் அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. . ஆண்டுதோறும் கோடை சீசனின்போது நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அரசு மற்றும் தனியார் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, காய்கறி, பழம் மற்றும் வாசனை திரவிய கண்காட்சி போன்றவைகள் அரசு சார்பில் நடத்தப்படுகிறது.மேலும், கலை விழாவும் நடத்தப்படுகிறது. தனியார் சார்பில் நாய்கள் கண்காட்சி மற்றும் குதிரை பந்தயம் ஆகியவை ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி துவங்கி ஜுன் மாதம் வரை மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் ஊட்டி ரேஸ் கோர்சில் குதிரை பந்தயங்கள் நடத்துவது வழக்கம். ஏப்ரல் 14ம் தேதி போட்டிகள் துவங்கி ஜூன் மாதம் வரை இரு மாதங்கள் நடத்தப்படுவது வழக்கம்.இப்போட்டிகளில் கலந்துக் கொள்ள பெங்களூர், சென்னை, பூனா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து 400க்கும் மேற்பட்ட பந்தய குதிரைகள் வரவழைக்கப்படவுள்ளன.இந்த குதிரைகள் வந்து தங்குவதற்காக தற்போது மைதானத்தில் கொட்டகை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் குதிரைகள் ஓடும் ஓடு தளத்தை (புல் மைதானம்) சீரமைக்கும் பணிகளிலும் துவக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: