லுங்கி நிறுவன மேலாளர் மர்மச்சாவு

ஈரோடு, பிப்.20: ஈரோட்டில் லுங்கி நிறுவனத்தில் பணியாற்றி வந்த விற்பனை பிரிவு மேலாளர் மர்மமான முறையில் நேற்று இறந்தார். உடம்பில் ரத்த காயங்கள் இருந்ததால் அவர் அடித்து கொலை செய்யப்பட்டரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு சூரம்பட்டியை சேர்ந்த இளமுருகன் (55). இவர், ஈரோட்டில் உள்ள லுங்கி நிறுவனத்தில் விற்பனை பிரிவு மேலாளராக கடந்த இரண்டரை ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந் நிறுவனத்தில், பல லட்சம் ரூபாய் கையாடல் நடந்திருப்பதாக நிறுவன உரிமையாளர் கண்டுபிடித்தார்.இதுதொடர்பாக, நிறுவனத்தில் பணியாற்றி வந்த அனைவரிடமும் விசாரணை நடத்தி வந்தனர். இதில், இளமுருகன் ஆந்திரா மாநிலத்திற்கு லுங்கி நிறுவனம் சார்பில் சென்று வந்தபோது, பல லட்சம் ரூபாயை கணக்கு காட்டாமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், லுங்கி நிறுவன மேலாளர் சந்தோஷ், பேக்கிங் இன்சார்ஜ் மதன் ஆகியோர் இளமுருகனிடம் தனி அறையில் வைத்து விசாரணை நடத்தினர். அதன்பின், சில மணி நேரத்தில் இளமுருகன் மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நிறுவன ஊழியர்கள், இளமுருகனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு இளமுருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்நிலையில், இளமுருகனின் மகனான உதயக்குமார் (29) ஈரோடு டவுன் போலீசில் புகார் அளித்தார். அதில், தனது தந்தை சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உள்ளார். அதன்பேரில், போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்துள்ளனர். இளமுருகன் அடித்து கொலை செய்யப்பட்டரா? அல்லது நிறுவன ஊழியர்கள் விசாரணை செய்யும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பம் குறித்து லுங்கி நிறுவன மேனேஜர் சந்தோஷ், மதன் உட்பட 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், இறந்து போன இளமுருகன் முதுகு பகுதியிலும், நெஞ்சு பகுதியிலும் ரத்த காயங்களும், அடித்த காயங்களும் உள்ளன. இளமுருகன் அடித்து கொலை செய்யப்பட்டரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பிரேத பரிசோதனை அறிக்கையிலும், விசாரணை முடிவிலும் தான் தெரியவரும்’ என்றனர்.

Related Stories: