ஈரோடு, மார்ச் 27: ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவடைந்ததால் மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் ஒருவருக்கொருவர் கட்டி தழுவி பிரியா விடை கொடுத்து சென்றனர். ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 2ம் தேதி தொடங்கியது. இந்த தேர்வு மாவட்டத்தில் 109 தேர்வு மையங்களில் நடந்து வந்தது. இறுதி தேர்வாக நேற்று கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், எத்திக்ஸ் மற்றும் இந்தியன் கலாசாரம், பயோ-கெமிஸ்டிரி, பொலிடிக்கல் சயின்ஸ், புள்ளியல் உள்ளிட்ட 11 பிரிவு மாணவ-மாணவிகளுக்கு தேர்வு நடைபெற்றது.
இந்நிலையில், பிளஸ் 2 இறுதி தேர்வு நேற்றுடன் நிறைவடைந்ததையொட்டி தேர்வு மையத்தை விட்டு வெளியே வந்த மாணவ-மாணவிகள் உற்சாகமாக துள்ளி குதித்து குழு, குழுவாக செல்பி எடுத்து நினைவுகளாக சேமித்தனர். சில பள்ளிகளில் மாணவ-மாணவிகள் தேர்வு மையத்திற்கு வெளியே வந்ததும் நடனமாடியும், நோட்டு பேப்பர்களை கிழித்து மேலே வீசியும் மகிழ்ந்தனர். இறுதியில் பள்ளி படிப்பினை நிறைவு செய்த மாணவ-மாணவிகள் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி கண்ணீருடன் பிரியா விடை கூறி பிரிந்து சென்றதையும் காண முடிந்தது.
