மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.56.53 லட்சம் பறிமுதல்: ரூ.36.20 லட்சம் திரும்ப ஒப்படைப்பு

ஈரோடு, மார்ச் 20: ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.56.53 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆவணங்கள் சமர்பித்ததால் ரூ.36.20 லட்சம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளின்படி, 8 தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படையினர் மற்றும் நிலைக்கண்காணிப்பு குழுவினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை ரூ.39 லட்சத்து 81 ஆயிரத்து 50 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதில், நேற்று ஈரோடு கிழக்கு தொகுதியில் ரூ.7 லட்சத்து 79 ஆயிரமும், ஈரோடு மேற்கு தொகுதியில் ரூ.74 ஆயிரத்து 540, பவானி தொகுதியில் ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்து 200, அந்தியூர் தொகுதியில் ரூ.2 லட்சத்து 47 ஆயிரத்து 750, கோபி தொகுதியில் ரூ.2 லட்சத்து 92 ஆயிரத்து 500, பவானிசாகரில் ரூ.1 லட்சத்து 48 ஆயிரத்து 700 என மொத்தம் ரூ.16 லட்சத்து 72 ஆயிரத்து 690 பறிமுதல் செய்யப்பட்டது. இதில், உரிய ஆவணங்களின் பேரில், ரூ.36 லட்சத்து 20 ஆயிரத்து 770, உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள ரூ.20 லட்சத்து 32 ஆயிரத்து 970ஐ கருவூலத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் கந்தசாமி கூறியதாவது:
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தான் குழுக்கள் அமைத்துள்ளோம். தற்போது பறக்கும் படை, நிலைக்கண்காணிப்பு குழுவினரிடம் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு வரும் பொதுமக்கள் அல்லது வியாபாரிகள் அவர்களது தேவைக்காக எடுத்து வந்த பணமாக இருந்தால், அதற்கு ஆவணங்கள் இல்லாமல் இருந்தால் அதனை அன்றைய தினம் மாலையே ஒரு கமிட்டி வைத்து விசாரித்து, திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஒரு நபர் வங்கியில் செலுத்த பல லட்சம் எடுத்து வருகிறார் என்றால், அதற்கான வங்கி படிவங்கள் இருந்தால், உடனடியாக சம்மந்தப்பட்ட வங்கியை தொடர்பு கொண்டு, வங்கியில் செலுத்துவதற்காக தான் பணம் எடுத்து செல்கிறாரா? என்பதை உறுதி செய்ததும் அவரது பணத்தை விடுவித்து விடுவோம். எங்களுக்கு பணம் எவ்வளவு என்பது முக்கியமல்ல. அது வாக்காளர்களுக்கு வழங்க எடுத்து செல்லப்படுகிறதா? என்பது தான் முக்கியம். அது வாக்காளர்களுக்கு வழங்க எடுத்து சென்றால் கட்டாயம் பிடிக்க உத்தரவிட்டுள்ளோம். அந்த நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்

Related Stories: