மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி: இவிஎம் இயந்திரம் மூலம் செயல் விளக்கம்

 

ஈரோடு, மார்ச் 29: ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெற உள்ளது. இதில், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, பவானிசாகர் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள 2,379 வாக்குச்சாவடிகள் உள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியாற்ற உள்ளனர். இவர்களுக்கான முதற்கட்ட பயிற்சி நேற்று மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெற்றது.

இதில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான பயிற்சி, ரங்கம்பாளையத்தில் உள்ள ஆர்என்எம் கலை அறிவியல் கல்லூரியிலும், ஈரோடு மேற்கு தொகுதிக்கான பயிற்சி கொங்கு கல்வி நிலைய மேல்நிலை பள்ளியிலும் நடைபெற்றது. இதில் அலுவலர்கள் வாக்குச்சாவடிக்கு சென்றதும் செய்ய வேண்டிய வழிமுறைகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும் விதம், தேர்தல் நடத்துவது தொடர்பான வழிமுறைகள் ஆகியன குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. தேர்தலின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. கட்டுப்பாட்டு கருவிகளுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையும், விவிபேட் கருவிகளையும் இணைக்கும் வழிமுறைகள், தேர்தல் தொடங்குவதற்கு முன்பு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு செய்து சரிபார்ப்பது ஆகியன தொடர்பாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலமாக செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி முகாம் நடந்த இடத்தில் மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.வாக்குப்பதிவு செய்வதற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.மேலும், மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு இருந்தது. கோபி தொகுதிக்கான பயிற்சி முகாம் கோபி பழனியம்மாள் பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்தது.

இந்த முகாமை மாவட்ட கலெக்டர் கந்தசாமி பார்வையிட்டார். இதேபோல் மொடக்குறிச்சி தொகுதிக்கான முகாம் மொடக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியிலும்,பெருந்துறை தொகுதிக்கான முகாம் பெருந்துறை கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலை பள்ளியிலும், பவானி தொகுதிக்கான முகாம் பவானி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியிலும்,அந்தியூர் தொகுதிக்கான முகாம் அந்தியூர் மங்களம் மெட்ரிக் மேல்நிலை பள்ளியிலும், பவானிசாகர்(தனி) தொகுதிக்கான முகாம் சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லூரியிலும் நடைபெற்றது.

 

Related Stories: