கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் கறவை மாடுகளை தாக்கும் பெரியம்மை நோய்க்கு வீடுகளிலேயே இயற்கை மருத்துவம்

வேலூர், பிப்.19: கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் கறவை மாடுகளை தாக்கும் பெரியம்மை நோய்க்கு இயற்கை மருத்துவத்தின் மூலமாக வீடுகளிலேயே சிகிச்சை அளித்து குணப்படுத்தலாம், என்று கால்நடைத்துறை டாக்டர்கள் தெரிவித்தனர்.கோடை காலத்தில் கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் பாதிப்பு ஏற்படும். குளிர்காலம் முடிய ஒருவாரத்திற்கு முன்பாக இந்த நோயின் தாக்கம் காணப்படும். ஈக்கள், கொசுக்கள் மூலமாக இந்த நோய் கால்நடைகளுக்கு பரவுகிறது. குறிப்பாக இந்த நோய் கறவை மாடுகளை அதிகமாக தாக்கும். இந்த நோய் பாதித்த கால்நடைகளின் உடலில் கொப்பளங்கள் தோன்றும். காய்ச்சல் ஏற்பட்டு மாடுகள் நிலையாக நிற்க முடியாமல் சோர்ந்து காணப்படும்.இந்த நோய்க்கு ஊசிகள் மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டாலும், நோயின் தன்மை குறைய சிறிது நாட்கள் தேவைப்படும். இந்நிலையில், இயற்கை மருத்துவத்தின் மூலமாக கறவை மாடுகளை தாக்கும் பெரியம்மை நோய்க்கு எளிமையாக சிகிச்சை அளித்து குணப்படுத்தலாம், என்று கால்நடைத்துறை டாக்டர்கள் தெரிவித்தனர்.

Advertising
Advertising

இதுகுறித்து கால்நடைத்துறை டாக்டர்கள் கூறியதாவது: குளிர்காலம் முடிந்து கோடை தொடங்குவதற்கு முன்பாக கறவை மாடுகளை தாக்கும் பெரியம்மை நோய் பரவும். தற்போது, வேலூர், அரக்கோணம், தக்கோலம் மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெரியம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. எளிமையான இயற்கை மருத்துவத்தின் மூலமாக இந்த நோய் பாதிப்புகளை தடுக்கலாம்.முதல் மருத்துவமாக 10 கிராம் மிளகு, 10 கிராம் உப்பு, தேவையான அளவு வெள்ளம் ஆகியவற்றை அரைத்து சிறிது சிறிதாக மாட்டின் நாக்கில் தடவ வேண்டும். இரண்டாவது மருத்துவமாக 2 பல் பூண்டு, கொத்தமல்லி 10 கிராம், சீரகம் 10 கிராம், கைப்பிடி அளவு துளசி, லவங்கம் இலை 10 கிராம், மிளகு 10 கிராம், 5 வெற்றிலை, 2 சின்னவெங்காயம்,

மஞ்சள் தூள் 10 கிராம், நிலவேம்பு இலைதூள் 30 கிராம், திருநீற்று பச்சிலை, வேப்பிலை, வில்வம் ஆகியவை தலா ஒரு கைப்பிடி, வெல்லம் 100 கிராம், ஆகியவற்றை அரைத்து முதல் நாள் ஒருமணிநேரத்திற்கு ஒருமுறை நாக்கின் மீது தடவ வேண்டும். 2வது நாளில் காலை மற்றும் மாலை நேரங்களில் நாக்கின் மீது தடவ வேண்டும். இதனை நோய் குணமாகும் வரை செய்ய வேண்டும். அதேபோல், கைப்பிடி அளவு குப்பைமேனி இலை, பூண்டு 10 பல், வேப்பிலை, துளசி இலை, மருதாணி இலை ஆகியவை தலா ஒரு கைப்பிடி அளவும், மஞ்சள் தூள் 20 கிராம் ஆகியவற்றை அரை லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேய்காய் எண்ணெய்யில் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். பின்னர், ஆறவிட்டு காயங்களை சுத்தப்படுத்தி அதன் மீது தடவ வேண்டும். காயத்தில் புழுக்கள் இருந்தால் சிதாப்பழ இலை அரைத்து தடவலாம்.

அதேபோல், பச்சை கற்பூரத்தை தேங்காய் எண்ணெயில் கலந்து காயத்தின் மீது போட்டால் புழுக்கள் வெளியே வரும். பின்னர், அவற்றை சுத்தம் செய்துவிட்டு மருந்து தடவலாம். இதனால் காய்ச்சல், கொப்பளம் உடனடியாக குணமாகும். மேலும், மற்ற கால்நடைகளுக்கு இந்த நோய் பரவுவது தடுக்கப்படும். எனவே, பொதுமக்கள் இந்த இயற்கை மருத்துவத்தை தங்களது வீடுகளில் தயாரித்து, கறவை மாடுகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கலாம். இவ்வாறு கால்நடைத்துறை டாக்டர்கள் தெரிவித்தனர்.

Related Stories: