முதியவருக்கு உணவு வழங்கி காப்பகத்தில் சேர்த்த போலீசார்

புதுச்சேரி, பிப். 17: உறவினர்களால் கைவிடப்பட்டு ரோட்டில் வீசப்பட்ட முதியவருக்கு உணவு வழங்கி பாதுகாப்பாக காப்பகத்தில் போலீசார் சேர்த்தனர். புதுவை பெரியார்நகர் முல்லை நகர் குடிசை மாற்று வாரியம் அலுவலகம் அருகே நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணியளவில் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையில் கிடந்தார். அந்த வழியாக வாகனத்தில் ஏற்றிவந்த உறவினர்கள், அவரை அங்கு வீசி விட்டு சென்றுள்ளனர். வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் அவரால் எழுந்திருக்க முடியாமல் அவதிப்பட்டார். 2, 3 முறை எழுந்து விழுந்ததால் அவருக்கு முகத்தில் அடிப்பட்டு ரத்தம் வந்தது.

இதனை பார்த்த அப்பகுதி மக்கள், இதுபற்றி உருளையன்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ்காரர்கள் மோகன், அண்ணாதுரை ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். ரோட்டில் வீசப்பட்டு காயத்துடன் பரிதவித்த முதியவருக்கு முதலுதவி அளித்து, உணவு, தண்ணீர் வழங்கினர். அவரிடம் ஊர், பெயர் விவரத்தை கேட்டதற்கு, அவரால் வேலூர் என்று மட்டும் கூற முடிந்தது. மற்றபடி, பெயரைக்கூட சொல்ல முடியவில்லை. இதையடுத்து அவரை மீட்ட போலீசார், பாதுகாப்பாக முதியோர் இல்லத்தில் சேர்த்தனர். போலீசாரின் இந்த மனிதநேயத்தை அங்கிருந்த மக்கள் பாராட்டினர்.

Related Stories: