சேத்துமடையருகே அட்டகாச புலி சிக்காததால் கூண்டு அகற்றம்

பொள்ளாச்சி, பிப். 12: பொள்ளாச்சியை  அடுத்த சேத்துமடை அருகே ஆயிரங்கால்குன்று பகுதியில் உள்ள ஒரு விவசாய  தோட்டத்தில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு நள்ளிரவில் புகுந்த 10 வயது  மதிக்கத்தக்க ஆண் புலி ஒன்று, அங்கு இருந்த ஒரு கன்று குட்டி, 5 ஆடுகளை  வேட்டையாடி சென்றது. இதனால் அப்பகுதியினர் பீதியடைந்தனர். இதையடுத்து புலியை கண்காணிக்க வனத்துறையினர் அந்த தோட்டத்தில் கேமரா பொருத்தினர். கண்காணிப்பு  கேமராவில், மீண்டும் தோட்டத்திற்குள் புலி வந்து சென்றது உறுதியானது.  இதனால் புலியை பிடிக்க கடந்த 1ம் தேதி கூண்டு வைக்கப்பட்டது. சுமார் 5  அடி உயரமுள்ள அந்த கூண்டில் உள்ளேயும், வெளியேயும் மாமிசம் போடப்பட்டது.  வெவ்வேறு நாட்களில் நள்ளிரவில் தோட்டத்துக்கு வந்த புலியானது, கூண்டின்  வெளியே கிடந்த இறைச்சியை ருசித்துவிட்டு அப்படியே திரும்பி சென்றது. இதனால்  கூண்டிற்குள் புலி சிக்காததால், வனத்துறையினர் ஏமாற்றமடைந்தனர்.

Advertising
Advertising

இருப்பினும், எப்படியாவது புலியை பிடித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில், வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஆனால்  கடந்த ஒரு வாரமாக, அந்த புலி வனத்திலிருந்து வெளியேறி தோட்டத்திற்குள்  வராமல் இருந்துள்ளது. மேலும், சேத்துமடை பகுதியில் சில நாட்களாக புலியின்  நடமாட்டம் இல்லாததால், அந்த புலி இடம்பெயர்ந்து வேறு இடத்திற்கு  சென்றிருக்கலாம் என வனத்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. பல  நாட்களாக காத்திருந்து புலியை பிடிக்க வேண்டும் என எண்ணிய  வனத்துறையினருக்கு ஏமாற்றமே மிஞ்சியதால், புலியை பிடிக்க தோட்டத்தில் வைத்த  கூண்டை வனத்துறையினர் அப்புறப்படுத்தி சென்றனர். இருப்பினும், விலங்குகள்  நடமாட்டம் குறித்து தெரிந்தால் தகவல் தெரிவிக்க வனத்துறையினர்  அப்பகுதியினருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories: