சிறுமி பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் எஸ்பியிடம் மனு

திண்டுக்கல், பிப். 11: வேடசந்தூர் அருகே சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி எஸ்பியிடம் மனு அளிக்கப்பட்டது. ஆத்தூர் தாலுகா, கும்மம்பட்டி பகுதியை சேர்ந்த நாகேந்திரன் திண்டுக்கல் மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு நேற்று வந்தார். அவர் எஸ்பி சக்திவேலிடம் ஒரு மனு அளித்தார். அதில், ‘வேடசந்தூர் தாலுகா, ரெங்கநாதபுரத்தில் உள்ள தனியார் மில்லில் நானும், எனது மனைவியும் வேலை செய்து வருகின்ற காரணத்தால் கடந்த 10 வருடங்களாக ராமநாதபுரத்தில் உள்ள கட்டபொம்மன் என்பது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தோம். கடந்த 2.2.20ம் தேதி காலை எனது மனைவி வேலைக்கு சென்று விட்டார். எனக்கு இரவு வேலை என்பதால் நான் வீட்டில் இருந்தேன். எனது மகள் காலை 8.30 மணிக்கு அழகுமணி மகன் அய்யப்பன் வீட்டிற்கு டிவி பார்த்து விட்டு வருவதாக சொல்லி விட்டு சென்றாள். மீண்டும் 11.30 மணி அளவில் எனது வீட்டிற்கு திரும்பி வந்து சாப்பிட்டு விளையாட செல்வதாக கூறி சென்றாள்.

அதன்பின் மாலை 4.30 மணியளவில் எனது மகள் டிராக்டரிலிருந்து கீழே விழுந்து விட்டதாக கூறியதன் அடிப்படையில், நான் ஓடிச்சென்று எனது மகளை தூக்கியபோது அவள் இறந்து கிடப்பது போல தெரிந்தது. இதையடுத்து வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றேன். அப்போது எனது மகளை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே எனது மகள் இறந்து விட்டதாக தெரிவித்து பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பரிசோதனையில் எனது மகள் பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் கொல்லப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக பரத்கிஷோர், குணசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் இதில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளான உமாசங்கர் மற்றும் இவரது மகன் அருண்குமார் ஆகியோரை கைது செய்ய வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.

Related Stories: