தேவதானப்பட்டி, ஜன.9: பெரியகுளம் அருகே சருத்துப்பட்டியில் விவசாயிகளுக்கு கால்நடை பராமரிப்பு மற்றும் சுகாதார பால் உற்பத்தி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் பெரியகுளம் பகுதியில் தங்கி உள்ளனர். இந்த மாணவர்கள் பெரியகுளம் அருகே உள்ள சருத்துப்பட்டியில் விவசாயிகளுக்கு கால்நடை பராமரிப்பு மற்றும் சுகாதாரமான பால் உற்பத்தி குறித்து பயிற்சி அளித்தனர்.
இந்த பயிற்சியில் லட்சுமிபுரம் கால்நடை மருத்துவர் கார்த்திகா கலந்து கொண்டு, கால்நடைகளுக்கு சுகாதாரமான முறையில் பால் உற்பத்தி, பால் கறவை செய்யும் முறை, மாடுகள் பராமரிப்பு, தொற்று நோய் மற்றும் நோய் தடுப்பு முறைகள், நோய்கள் வரும் முன் காக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கி கூறினார்.
இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை வேளாண் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் கார்த்திகேயன், கேசவமூர்த்தி, அருண்மொழி, மாதவகிருஷ்ணன், திலக், பிரவீன், அன்புமணி ஆகியோர் செய்திருந்தனர். இந்த பயிற்சியில் வேளாண்மைத்துறை அலுவலர்கள், ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
