வாகனம் மோதி பெண் தொழிலாளி பலி

தேனி, ஜன.8: பெரியகுளம் அருகே பெருமாள்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்கிரமாதித்தன் மனைவி ஈஸ்வரி (44). இவர் தேனியில் இருந்து போடி செல்லும் சாலையில் மாரியம்மன் கோவில்பட்டி பிரிவு பகுதியில் உள்ள ஒரு தனியார் மில்லில் டெய்லராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு பணி முடிந்தபிறகு, ஈஸ்வரி மில்லில் இருந்து புறப்பட்டு ஊருக்கு செல்வதற்காக, மில்லின் முன்புறம் உள்ள தேனி-போடி தேசிய நெடுஞ்சாலையினை கடக்க முயன்றார். அப்போது போடியில் இருந்து தேனி நோக்கி அதிவேகமாக வந்த கார், ஈஸ்வரி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்தவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து, உயிரிழந்த ஈஸ்வரியின் கணவர் விக்கிரமாதித்தன் அளித்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விபத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்த தேவாரம் அருகே பி.ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்த சொக்கர் (50) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: