குறிக்கோளை மட்டும் மனதில் வைத்து செயல்பட்டால் எதிர்காலம் வெற்றியை மட்டுமே பரிசு அளிக்கும் வேலைவாய்ப்பு கருத்தரங்கில் கலெக்டர் பேச்சு

கரூர், ஜன. 24: கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காட்சியில் மாணவர்கள் போட்டித் தேர்வினை எதிர்கொள்ள வேண்டிய விதம் குறித்தான புத்தகங்கள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தேர்வுகளின் வினாத்தாள்கள், தன்னம்பிக்கையூட்டும் புத்தகங்கள் என பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் இடம்பெற்றிருந்தன.

கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்ட கலெக்டர் அன்பழகன் பேசியதாவது: மாணவ, மாணவிகள் தங்கள் எதிர்காலத்தை எந்தவகையான வெற்றிப்பாதையில் அமைத்துக் கொள்ளலாம் என்பதை உங்களுக்கு வலியுறுத்தும் நிகழ்ச்சியாக இது அமைந்துள்ளது. கடந்த நிமிடங்களை நினைத்து கவலை கொள்ளாமல், தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் குறிக்கோளை மட்டும் மனதில் வைத்து செயல்பட்டால் எதிர்காலம் வெற்றியை மட்டுமே பரிசளிக்கும். காற்றடைத்த பந்தை எவ்வாறு நீரில் மூழ்கடிக்க முடியாதோ அதே போல, தகுதியுடையவர்களை யாரும் நிராகரிக்க முடியாது. அவர்களுக்கு வரவேண்டிய மரியாதை, வேலை சமுதாயத்தில் கிடைத்தே தீரும்.

நமது குறிக்கோளை, இலக்கை தினமும் தூங்கி விழித்தது முதல் 5 நிமிடங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். இதே போல், இரவு தூங்கச் செல்லும் முன் அன்றைய தினத்தில் நாம் செய்த பணிகள் என்ன, நல்ல காரியங்கள் என்ன, நாளை என்ன செய்ய வேண்டும் என்பதை மனதுக்குள் எண்ணிப்பார்க்க வேண்டும். அனைவரும் இலக்கை அடைவதற்கு தகுதியானவர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் கவுசல்யா தேவி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் விஜயா, தொழில் மைய பொது மேலாளர் ரமேஷ், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் சுப்புலட்சுமி உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

Related Stories: