கோவையில் ரூ.4 லட்சம் மோசடி புகார் ரியல் எஸ்டேட் பிரமுகர் உட்பட 3 பேர் மீது வழக்கு

கோவை, ஜன.22: கோவையில் ரூ.4 லட்சம் மோசடி புகாரில் ரியல் எஸ்டேட் பிரமுகர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை பீளமேடு பாலன் நகரை சேர்ந்தவர் விஜயகுமார் (42). இவர் கோவை பீளமேடு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:- கோவை காந்திபுரத்தில் அலுவலகம் நடத்தி வரும் ரியல் எஸ்டேட் பிரமுகர் செந்தில்குமார் என்பவர் கடந்த 2013ம் ஆண்டு அன்னூர் அருகேயுள்ள கணுவாய் கிராமத்தில் வீட்டுமனைகள் லே-அவுட் செய்திருப்பதாகவும், அம்மனைகளை மாத தவணைக்கு வாங்குமாறு என்னிடம் தெரிவித்தார். நானும் அவரை நம்பி செந்தில்குமாரின் கூட்டாளி ஈஸ்வரன் என்பவரிடம் ரூ.20 ஆயிரத்துக்கான காசோலையை கொடுத்தேன். இதனைத்தொடர்ந்து 2 மனைகள் ஒதுக்கி இருப்பதாகவும், மாத தவணையாக ரூ.7,550 வீதம் 36 மாதங்களுக்கு ரூ.2,91,800 செலுத்த வேண்டும் என கூறி கிரைய ஒப்பந்தம் செய்து கொடுத்தனர். ஈஸ்வரன் கூறிய கிருஷ்ணமூர்த்தி என்பவர் மாதாமாதம் தவணை தொகையை பெற்று ரசீது கொடுத்து செல்வார்.

2016ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் முழு தொகையையும் செலுத்தி விட்டேன். பின்னர் நிலத்தை கிரையம் செய்து தருமாறு கேட்டபோது அப்ரூவல் ஆகவில்லை என இழுத்தடித்து ஒதுக்கப்பட்ட இடத்திற்கு பதிலாக வேறு 3 மனைகளை வாங்கி கொள்ளுமாறும், அதற்கு மேலும் ரூ.1,85,550-ஐ செலுத்துமாறும் கூறினர். இதனையடுத்து அந்த இடத்தையும் கிரையம் செய்து கொடுக்காமல் வேறு நபர்களுக்கு கிரையம் செய்து கொடுத்து விட்டனர். 3 பேரும் சேர்ந்து மொத்தமாக ரூ.3,98,600ஐ பெற்றுக்கொண்டு ஏமாற்றி விட்டனர். என்னைப்போல் பலரை 3 பேரும் சேர்ந்து ஏமாற்றியுள்ளதாக தெரிகிறது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கொடுத்த புகாரில் தெரிவித்திருந்தார்.  அதனடிப்படையில் பீளமேடு போலீசார் செந்தில்குமார், ஈஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 3 பேர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>